நேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பேசினார். அப்போது "நாம் எதிர்க்க போவது இரண்டு ஜாம்பவான்களாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை என்பதை மனதில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. ஆள் பலம், பண பலம் இருந்தும் கலைஞரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிலையில் ஸ்டாலின் உள்ளார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் உடையும். இந்த வயதில் என்னை நம்பி வர இருக்கிறீர்கள் முதலிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவது நல்லது.
![barathiraja](http://image.nakkheeran.in/cdn/farfuture/o4bhLPAJMqC9eRg2bGKtGBlf7Dy0_LPKOMXfYcZHfzE/1584083908/sites/default/files/inline-images/barathiraja_19.jpg)
என்னை வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன்" என தெரிவித்தார்.
ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாட்டை பிற கட்சி தலைவர்கள் விமர்சித்தும், வரவேற்றும் வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.
இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.
ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்” என்றார்.