![balakrishna fans celebration video goes viral on internet](http://image.nakkheeran.in/cdn/farfuture/IXsQXVSLvri0qNe8tYLYGEJfFb4LmialCHPSRRqXfBw/1673682632/sites/default/files/inline-images/77_52.jpg)
தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாலகிருஷ்ணா ரசிகர்கள் வழக்கம்போல பட்டாசு, பேனர் எனக் கொண்டாடினர். அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடிய நிலையில், அது அந்நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமானது என்று கூறி போலீசார் ரசிகர்களை எச்சரித்தனர்.
இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 'வீர சிம்ஹா ரெட்டி' ஓடிக்கொண்டிருந்த திரையரங்கின் திரையில் திடீரென தீப்பிடித்தது. உற்சாகத்தில் சில ரசிகர்கள் தீ வைத்து விட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த நிலையில் மற்றொரு திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோவும் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கில் வழக்கம் போல கோலாகலமாகக் கொண்டாடிய ரசிகர்கள் புதிதாக இன்னொரு செயலையும் செய்துள்ளார்கள். திரையரங்கின் முன்னே படம் வெற்றி பெற ஒரு ஆட்டுக் கிடாவை கொண்டு வந்து வெட்டியுள்ளனர். அப்போது "ஜெய் பாலையா... ஜெய் பாலையா..." எனக் கோஷமிட்டனர். இதே போல் கிழக்கு கோதாவரியில் உள்ள ஒரு திரையரங்கில் கிடா வெட்டி பலி கொடுத்துள்ளனர்.
ரசிகர்களின் இந்த செயலுக்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் கிடா வெட்டிக் கொண்டாடிய ரசிகர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர்.