Skip to main content

"அந்த சம்பவத்தை நினைச்சு ஒரு வாரம் பொறாமையா இருந்துச்சு" - பாலா

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

bala speech about mysskin work in vanangaan

 

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

 

அப்போது பாலா பேசுகையில், "இளையராஜாவை பற்றி மிஷ்கின் சொல்லிக்கிட்டே இருந்தார். ஆனால் இளையராஜாவும் மிஷ்கினை பற்றி என்னிடம் சொன்னதும் உண்டு. அப்போது மிஷ்கினின் படம் ரிலீஸானது தெரியாது. நான் என்னோட படத்திற்காக இளையராஜாவிடம் சென்றிருந்தேன். அப்போது ஷார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டு, சம்மந்தமே இல்லாமல் ஷூ போட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு உருவம் போய்க்கொண்டிருந்தது. அந்த உருவம் போனதுக்கு பிறகு இளையராஜாவிடம் கேட்டேன். யார் அது? பேரு மிஷ்கின், அவனை பத்தி சாதாரணமா எடை போட்டுடாத... பெரிய இன்டலெக்சுவல் என்றார். 

 

அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியாது. ஆனால் மிஷ்கினிடம் நெருங்கி பழகினதுக்கு பிறகு தான் தெரியுது, அது உண்மை என்று. ஒரு டெவில், இன்னொரு டெவிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய பெயரையே வோல்ஃப்-ன்னு (Wolf) தான் என் ஃபோனில் சேவ் பண்ணி வச்சிருக்கேன். ஓநாய் என்று அர்த்தம். நிறைய பேச வேண்டி இருக்கு. அடுத்தடுத்து மேடைகளில் பேசுவோம்" என்றார். 

 

உடனே பேசிய மிஷ்கின், "நான் 2 டைரக்டர் கிட்ட அசிஸ்டண்டா வேலை பாத்திருக்கேன். பத்து படம் பண்ணிட்டு இப்போது பாலாவுடைய வணங்கான் படத்தில் அசிஸ்டன்ட்டா வேலை பார்த்திருக்கிறேன். அந்த பெருமையை எனக்கு கொடுத்த பாலாவிற்கு நன்றி" என்றார். பின்பு பேசிய பாலா, "அசிஸ்டண்ட் டைரக்டரா மட்டும் இல்லை. டைரக்டராகவே ஒர்க் பண்ணிருக்கான். ஒரு சீன் நடிச்சான். அதை நீயே கம்போஸ் பண்ணிடு என்றேன். வித்தியாசமான கம்போசிங். ஷாட் முடிந்ததும் ஓகே என்றேன். வேகமா பக்கத்துல ஓடி வந்து, 'இன்னொரு தடவ பாத்திட்டு செக் பண்ணிட்டு ஓகே சொல்லுங்க...' என்றான். திரும்ப பார்த்தேன், 'நல்லதானடா இருக்கு' என்றேன். 

 

அந்த ஷாட் நீளமான ஒன்னு. 20 பேர் இருப்பாங்க. அதில் மிஷ்கின் கையை கட்டிக்கிட்டு கீழே குனிஞ்சு நிக்கணும். ஷாட் முடிந்ததும், என்னிடம் வந்து அதில் ஒரு பொண்ணு மட்டும் லேசா கண்ணு அசைச்சுருக்கு. கேமராவை பார்க்கிற மாதிரி இருக்கு என்றான். குனிஞ்சு தானே நிக்க சொன்னோம்... எப்படி அதை கவனிச்சான் என பார்த்தால், கீழே குனிஞ்சுக்கிட்டே யார் யார் என்ன பண்ணுறாங்க என்பதை பார்த்திருக்கிறான். அப்படி ஒரு ஷார்ப்பான ஆளு மிஷ்கின். அந்த சம்பவத்தை நினைச்சு ஒரு வாரம் பொறாமையா இருந்துச்சு. மிஷ்கினுக்கு முன்னாடி நாம ஒண்ணுமே இல்ல என தோணுச்சு" என்றார்.   

 


 

சார்ந்த செய்திகள்