சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பாலா. அவர் சம்பாதித்த நிதியில் சமீபத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதேபோல் ஆம்புலன்சு வசதியின்றி இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு 10 ஆம்புலன்சு வாகனம் எனது சொந்த நிதியில் வாங்கித் தர முடிவு செய்துள்ளேன்” எனச் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு, சோளகர் பழங்குடியின மக்களின் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகளாவிய தமிழர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்தீங்க. அதற்கு நன்றி. அதையெல்லாம் பார்க்கும் போது தான் இன்னும் ஓடணும், நிறைய செய்ய வேண்டும் என தோனுது. அப்படி செஞ்சது இந்த 3வது ஆம்புலன்ஸ். முதல் ஆம்புலன்ஸ் அறந்தாங்கியில் பெரியோர்களுக்கு கொடுத்தோம். இரண்டாவது ஈரோடு குன்றி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொடுத்தோம்.
இந்த சோளகர் ஊரில் ரோடு வசதியே இல்லை. அதனால் ஆம்புலன்ஸ் கொடுத்தது, ரொம்ப உதவியா இருக்குன்னு அந்த மக்கள் சொன்னாங்க. ஆங்கரிங் பண்ணி, அதுல வந்த பணத்தில் தான் இந்த ஆம்புலன்ஸ் வாங்கினேன். மேலும் அந்த பகுதியில் கீழே உள்ள தாமரைக்கரை என்ற ஊரிலும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்தேன். யார்கிட்டயும் 1 ருபாய் வாங்காமல் உதவி பண்ணனும்ங்குறது தான் நம்முடைய பாலிசி. உயிரை காப்பாத்துறதுக்கும் பொருள் வாங்கி கொடுத்துட்டேன். பயிரை காப்பாத்துறதுக்கும் பொருளை வாங்கி கொடுத்துட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கு இது எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.
மேலும் சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களுக்கு, இறுதி சடங்கு செய்ய முடியவில்லை என கோரிக்கை வந்தது. அந்த கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்ற போகிறேன்" என்றார்.