![Kangana Ranaut](http://image.nakkheeran.in/cdn/farfuture/MmcmOhgVdK-O31h5hBQfXWLoYKG02OSRJFHCRM7u7vs/1614599217/sites/default/files/inline-images/kangana_0.jpg)
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மறைவிற்குப் பிறகு ஊடகமொன்றில் பேசிய பிரபல நடிகை கங்கனா ரணாவத், பாலிவுட் திரையுலகில் ஒத்த சிந்தனை கொண்ட நபர்கள் குழுக்களாக இணைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்த நேர்காணலில் பாடலாசிரியர் ஜாவத் அக்தரின் பெயரையும் குறிப்பிட்டார். கங்கனா ரணாவத்தின் குற்றச்சாட்டை மறுத்த ஜாவத் அக்தர், அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார். அந்தப் புகார் மனுவில், 'ஹ்ரித்திக் ரோஷனுடன் கங்கானாவிற்கு இருந்த உறவு குறித்து வெளியே பேசக்கூடாது' என நான் மிரட்டியதாக அவர் கூறுவதில் துளியும் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பிப்ரவரி 1-ஆம் தேதி விசாரித்த அந்தேரி நீதிமன்றம், மார்ச் 1-ஆம் தேதிக்குள் கங்கனா ரணாவத் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை கங்கனா ரணாவத் தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவில்லை. நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்று நிறைவடையும் நிலையில், கங்கனா ரணாவத்திற்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை அந்தேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.