![Baba Black Sheep trailer released](http://image.nakkheeran.in/cdn/farfuture/d2MJU7MKrys03Yb5vVkhQftoswktl0GqviLzwt-nKlE/1686890329/sites/default/files/inline-images/88_52.jpg)
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூட்யூப் பிரபலம் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் 'பாபா பிளாக் ஷீப்'. இப்படம் மூலம் பல டிஜிட்டல் ஊடகப் பிரபலங்கள் கால் பதிக்கின்றனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ்த் திரைப் பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களைத் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
முதலாவதாக தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் - இயக்குநர் ராஜ் மோகனை மேடையில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி - ஹீரோ நரேந்திர பிரசாத்தை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - ஹீரோ அயாஸை அறிமுகப்படுத்தினார், நடிகர் இளவரசு - குட்டி மூஞ்சி விவேக்கை அறிமுகப்படுத்தினார். நடிகர் மணிகண்டன் - ராம் நிஷாந்த்தை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் ஓபேலி கிருஷ்ணா - பிரகதீஸ்வரனை அறிமுகப்படுத்தினார். நடிகை வாணி போஜன் - சேட்டை ஷெரீப்பை அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், பல பேர் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இணையத்தில் வெளியான குறுகிய நேர டிரெய்லர், நிறைய எண்ணிக்கையிலான பார்வையாளர்களைப் பெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.