அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தில் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் கதை தன்னுடையது என அஜ்மத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி அம்ஜத் மீரான் இதனிடையே கடந்த ஆண்டு மூன்று மனுக்களை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, இயக்குநர் அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வழக்கு செலவாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அம்ஜத் மீரான், கூடுதல் ஆதாரங்களை சமர்பிக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அட்லீ மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் வழக்கு செலவு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாததால், அம்ஜத் மீரான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அம்ஜத் மீரான் மேல்முறையீடு செய்தார். அவர் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை தாண்டி மேல்முறையீடு செய்த நிலையில், தாமதத்தை ஏற்றுக் கொள்ளவும் அந்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லி, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அம்ஜத் மீரான் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.