ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
![arm with rajni](http://image.nakkheeran.in/cdn/farfuture/54gPR46zu-CrAfr6hgZNoVB-WPbcgQ7f8l4TXM_AbnQ/1580968267/sites/default/files/inline-images/arm-with-rajni.jpg)
இந்நிலையில் இந்த படம் போதுமான பணத்தை வசூலீட்டவில்லை என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக லைகா நிறுவன அலுவலகத்திற்கு விநியோகஸ்தர்கள் சென்று கேட்டபோது, இயக்குனரையும் ரஜினிகாந்தையும் நேரில் பார்த்து பேசுங்கள் என விநியோகஸ்தர்களை அணுப்பப்பட்டுள்ளனர்.
அதன்பின் அவர்கள் இயக்குனர் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தபோது அவர் அனுமதிக்கவில்லை, அதேபோல ரஜினிகாந்தும் நேரில் பார்த்து பேச அனுமதிக்கவில்லை என்று விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதன்பின், இதை கண்டிக்கும் விதமாக ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் ஆகியோரை கண்டித்து சென்னையில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.