ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சி 'விஜய் அவார்ட்ஸ்' விருது விழாவை நடத்திவந்தது. ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுக்குரியவர்களை மக்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையிலும் தேர்வாளர்கள் முடிவின்படியும் தேர்ந்தெடுத்து, ஒன்பது ஆண்டுகளாக விருதுகளை வழங்கியது.
இடையில் இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாத நிலையில் இந்த வருடம் பத்தாவது ஆண்டாக நடக்கவிருக்கிறது. படங்களை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, நடிகை ராதா ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டு அவர்களுடன் ஒரு பாலிவுட் இயக்குனரும் இணைந்துள்ளார்.
கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ராமன் ராகவ் 2.0, தேவ்-டி ஆகிய படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப்தான் இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் ஜூரியில் புதிதாக இணைந்துள்ளார். தற்போது அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த விழா வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.