![Annaatthe](http://image.nakkheeran.in/cdn/farfuture/0BYgbSeTXYQCLbtimv_w6Cst_jh1esnzas6v3oLrxtY/1633958798/sites/default/files/inline-images/65_25.jpg)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தைத் தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் முடிவில் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள 'அண்ணாத்த... அண்ணாத்த...', 'சாரல் காற்றே...' என்ற இரு பாடல்களைப் படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.