![ameer about pm modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/0_j5dqKhx4i8yiiXCfnchh-ccB1vJy6H6Qkxpdfz6qM/1685774074/sites/default/files/inline-images/24_73.jpg)
இயக்குநர் மற்றும் நடிகரான அமீர், தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் திரைத்துறையைத் தாண்டி தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் அமீர். புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை திறந்துள்ளார். இந்த ரெஸ்டாரன்ட் சென்னை பெருநகரில் கிழக்கு கடற்கரை சாலையில், உத்தண்டி டோல் கேட் அருகே '4 ஏஎம் காஃபி மற்றும் கிட்சன்' (4am Coffee & Kitchen) என்ற பெயரில் அமைந்திருக்கிறது.
இதன் திறப்பு விழாவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் வருகை தந்து திறந்து வைத்தனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் அமீருக்கு வாழ்த்துக்கள் சொல்லியுள்ளனர். பின்பு அமீரிடம், டீக்கடையில் வேலை பார்த்து இன்று பிரதமராக இருக்கும் மோடி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், "டீ கடை நடத்துவது யாரும் கேவலம் என்று சொல்லவில்லை. அதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நேர்மையாக தொழில் செய்பவர்கள் அனைவரையும் கௌரவக் குறைவாக நாம் பார்க்கவில்லை. அவர் டீ கடையில் இருந்திருந்தாலும் அதை கேவலமாக சொல்லவில்லை.
படித்தவர்கள் டீ கடைக்கு செல்லுங்கள் என்று ஒரு தேசத்தின் பிரதமர் சொல்லக்கூடாது. அதை தான் விமர்சிக்கிறோம். படித்தவர்கள் இந்த வேலைக்கு போக வேண்டும் என்று யாரும் முடிவெடுக்கக் கூடாது. என்ன வேலைக்கு போக வேண்டும் என்பது படித்தவர்களுக்கு தெரியும். அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.