2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்துவருகிறது. ஏற்கனவே 3Dயில் பிரம்மாண்டமாக வெளியான டீஸர் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பையும் எக்கச்சக்க மீம்ஸையும் பெற்றது. அந்த டீஸரின் அடிப்படையில் படத்தின் கதை குறித்தும் கதாபாத்திரங்கள் குறித்தும் பல்வேறு விதமான யூகங்கள் வந்தன. நாயகன் ரஜினிகாந்த்தின் வசீகரன் பாத்திரம் குறித்தும் 'சிட்டி' ரோபோ குறித்தும் நாம் அனைவரும் அறிந்ததே. அதனால், வில்லன் அக்ஷய் குமார் பாத்திரம் குறித்துதான் அதிக யூகங்கள் நிலவின.
இன்று (03-11-2018) இன்னும் சற்று நேரத்தில் ட்ரைலர் வெளியாகவிருக்கும் நிலையில், 2.0 டீமில் இருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி, வில்லன் அக்ஷய்குமார் ஒரு 'ஆர்ணித்தாலஜி' ப்ரோஃபஸ்ஸர். ஆர்ணித்தாலஜியா? அப்படியென்றால்? பறவைகள் குறித்த படிப்புக்கான பெயர்தான் ஆர்ணித்தாலஜி. படத்தில் பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் செல்போன் டவர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்று கேப்ஷன் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, அக்ஷய் குமார் பாத்திரம் பறவைகள் படிப்புக்கான பேராசிரியராக இருக்க வாய்ப்புகள் அதிகம். பறவைகள் மீதான அன்பால், மக்களின் செல்போன்களை பறக்க விடுகிறாரோ என்னவோ? படம் வந்தால் தெரியும், படம் தொடங்கப்பட்டபோது இருந்த இந்தப் பாத்திரப்படைப்பு இருக்கிறதா, இல்லை ஏதேனும் மாற்றம் கண்டிருக்கிறதா என்று.