நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக அஜ்மல் உடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. நமது கேள்விகளுக்கு பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்கள், நான் சமீபத்தில் நடித்த ‘தீர்க்கதரிசி’ படத்தில் இருக்கின்றன. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வகையில் இருக்கும். படம் மிகவும் வேகமாக இருக்கும். நல்ல படம் கொடுத்துள்ளோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நடுவில் நான் ஒரு பிரேக் எடுத்தேன். 15 படங்கள் செய்தால் அதில் 8 வெற்றிப் படங்கள், மற்றவை நான் செய்த தவறு. மக்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
தீர்க்கதரிசி படத்தில் சத்யராஜ் சார் போன்ற பெரிய நடிகரோடு வேலை செய்யும்போது என்னால் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைத்தேன். அவர் மிகவும் உண்மையானவர். சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவார். அனைவருடனும் நன்கு பழகுவார். தன்னுடைய மகன் போல் தான் எங்களையும் நடத்தினார். நான் சினிமா குறித்து நிறைய கற்றுக்கொண்டது மிஷ்கின் சாரிடம் தான். சினிமா குறித்த அறிவை எனக்கு வழங்கியது அவர்தான். ஒரு நடிகன் என்னென்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற பல விஷயங்களை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
அவர் எனக்கு ஒரு சகோதரர் மாதிரி. கே.வி. ஆனந்த் சாருடன் இணைந்து பணியாற்றும்போது அவர் மேல் இருந்த மரியாதை இன்னும் அதிகமானது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பது புரிந்தது. 'கோ' படத்தில் நடிக்கும்போது நான் பெரிய நடிகராக இல்லாவிட்டாலும் என்னை நம்பி அந்த கேரக்டரை வழங்கினார்.