ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “கஷ்டப்பட்டு கிடைக்கிறதுதான் நிலைக்கும். இதை ஆழமாக நம்புகிறேன். இந்த படம் அரசியல் பேசுதா என்றால், சின்ன அரசியல் பேசுது. அது மக்களுக்கான அரசியல். மக்களுக்குள் இருக்கும் அரசியல். நாட்டின் குடிமகனாக இருக்கும் அனைவருக்கும் அரசியலில் பங்கு இருக்கு. அரசியல் இல்லாமல் எந்த ஒரு நாடுமே இயங்காது. அரசியல் என்பது எல்லா இடத்திலும் இருக்கு. பார்க்கிற விதம்தான் மாறுபடும். இதுதான் லால் சலாம் படமும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “நான் பேசியது லால் சலாம் படத்தை ப்ரமோட் செய்ய ஒரு யுக்தியா? ஏற்கனவே ப்ளான் பண்ணி பண்றாங்களா என அப்பாவிடம் ஒருவர் கேட்ட மாதிரி எனக்கு கேட்டுச்சு. என் மூலமாக ஒரு யுக்தியை கையாண்டோ, படத்தில் அரசியல் பேசியோ, அவர் நம்பாத ஒரு விஷயத்தை படத்தில் நடிச்சோ, படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த மாதிரி ஒரு அரசியலும் பேசாத படம் ஜெயிலர். அது ஓடிச்சா, இல்லையான்னு உங்களுக்கே தெரியும். நான் அல்லது எனது சகோதரியோ, அவரவர்களின் சொந்த கருத்தை மதிக்கக்கூடிய ஒரு மனிதர். அவரிடம் அந்த கேள்வியை கேட்டது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்றார்.