![AICWA writes pm modi ban why i killed gandhi movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/SlS8KifHBhqWD6GTMb4eVYnVGLwo0TEFsIVr7qBfdrw/1643009199/sites/default/files/inline-images/ganthi_3.jpg)
இயக்குநர் அசோக் தியாகி 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். கடந்த 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றதறகான காரணத்தை விளக்கி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' படம் உருவாக்கப்பட்டுள்ளது. அமோல் கோல்ஹே, நாதுராம் கோட்சேவாக நடித்துள்ள இப்படம் ஜனவரி 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' படத்திற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உலக அளவில் இந்தியாவின் பிம்பமான மகாத்மா காந்தியைக் கொலை செய்தவரை ஹீரோவாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது எனக் கூறி இப்படத்தை தடை செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வருக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில், நாதுராம் கோட்சேவை ஹீரோவாக சித்தரித்துள்ள இப்படம் வெளியானால் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதுடன் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அக்கடிதத்தில், இப்படத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.