![after Will Smith incident oscar committee A security committee has been set up](http://image.nakkheeran.in/cdn/farfuture/9PzmeNKOge4wTN7FwBd61g7sORvAWHFWKIuvsKVkrWY/1677138757/sites/default/files/inline-images/296_10.jpg)
உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா வருகிற மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முந்தைய வருடம் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் வில் ஸ்மித் மனைவி குறித்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் தனது இருக்கையிலிருந்து எழுந்து மேடை ஏறி தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்பு விருது பெற மேடை ஏறிய வில் ஸ்மித் தான் செய்த செயலுக்காக கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அமைய்ப்பு வில் ஸ்மித்துக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க விசாரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து ஆஸ்கர் அமைப்பான அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Science) அமைப்பின் பதவியில் இருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்தார். இந்த விவாகரம் பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அதன் எதிரொலியாக இந்த ஆண்டு ஆஸ்கர் அமைப்பு ஒரு முடிவெடுத்துள்ளது. இந்த முறை எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமலிருக்க ஒரு பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது. இதை மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை இந்த பாதுகாப்பு குழு எடுக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த விழாவில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.