![actress vinodhini criticized nirmala sitharaman](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z6r_dDHIfYWoU8zGLobBywMplNrADPRyn33aAN5i5Zs/1666182322/sites/default/files/inline-images/300_44.jpg)
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன். அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாணய சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நிதி அமைச்சரின் பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானதோடு, இணையதள வாசிகள் பலர் அதனை விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில், நடிகை வினோதினி இதனை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு உணவகத்தின் முதலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடக்கும் ஒரு வாக்குவாதம் போல் அவர் நடித்துள்ளார்.
அதில், "குறைகளை தைரியமாகச் சொல்லுங்க. குறை சொன்னா உள்ள தூக்கிப் போட நாங்க என்ன ஜனநாயக நாடா... நாங்க ஒரு உணவகம். நீங்க எங்களின் குறைகளை சுட்டிக் காட்டினால்தான் எங்கள் குறைகளை நாங்கள் திருத்திக்க முடியும். என்ன குறை சொல்லுங்க. என்னது...வெங்காய தோசையில் வெங்காயம் கம்மியா இருந்துதா... வெங்காயம் கம்மியா இல்ல தோசை பெருசா இருந்தது. நல்லா யோசித்து பாருங்கள்.
அப்புறம் என்ன குறை. சாம்பார்ல கேரட் தேட வேண்டியிருந்ததா... ஆனா கேரட்ல சாம்பாரை தேட வேண்டியதில்லைல. எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க. அதுதான் எல்லாமே. வேற என்ன குறை. தேங்கா சட்னியில தேங்காய் ஊசி போயிருந்ததா. தேங்காய் அப்படியே தான் இருந்தது. நாள் தான் கடந்து போச்சு. அதுக்கு தேங்கா என்ன பண்ண முடியும். நீங்க எல்லாத்தையும் நெகட்டிவா யோசிக்கிறீங்க. ஒரு படத்துல சொல்லுவாங்கல்ல. ஒரு சின்ன வரி பக்கத்துல பெரிய வரியை போட்டு பாருங்க, அப்புறம் அந்த சின்ன வரியை பத்தி நீங்க கவலைப் படமாட்டீங்க. என்னது அது கோடா. கோடோ ரோடோ நாங்க அத வரின்னுதான் சொல்லுவோம்." என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.