![simran](http://image.nakkheeran.in/cdn/farfuture/3KT_fZqdcT5pvtf2i-d7XpYtA0GdOgboy0-bqjIaWSs/1607665837/sites/default/files/inline-images/simran_1.jpg)
2018-ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் அந்தாதூண், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இந்திப்படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது. இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். நடிகை தபு நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் இப்படத்தில் வெகுவாக பேசப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடந்து, படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவியது. இதற்கு மத்தியில், அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.
அவரது மகனான பிரசாந்த் நடிக்க இருக்கும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. கதை தொடர்பான விஷயத்தில் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தில் இருந்து விலகியதாக பின்னர் கூறப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனரான ஜே ஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார். இந்தியில் நடிகை தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கிறார்.
ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் நடிகர் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்த சிம்ரன், தற்போது அவருக்கு வில்லியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.