இளம் வயதிலேயே க்ரூப் டான்ஸராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ஷர்மிலி, இளவரசன், ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் கிளாமர் ரோல்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட ஷர்மிலி, நடிகர் கமல்ஹாசன் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"புன்னகை மன்னன் படத்தின் போது நான் ரொம்பவும் சின்ன பொண்னு. க்ரூப் டான்ஸராகத்தான் போனேன். அப்போது எனக்கு பாலசந்தர் சார் என்றால் யாரென்று தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் கத்தி கத்தி பேசிக்கொண்டு இருக்கும்போது யார் இந்தப் பொண்ணு, இப்படி பேசிக்கிட்டு இருக்கா என்று ஒருவரிடம் கேட்டுவிட்டு, ஏய் பாப்பா... பேசாம அமைதியா இரு என்று பாலசந்தர் சார் சொன்னார். நான் அப்படித்தான் பேசுவேன், நீங்க யாரு என்ன பேசாதனு சொல்றதுக்கு என்று பதிலுக்கு நான் கேட்க, கமல் சாருக்கு அதிர்ச்சி. ஆனால், இந்தப் பொண்ணு எவ்வளவு தைரியமாக பேசுது பாருங்க என்று பாலசந்தர் சார் சிரித்துவிட்டார். எங்களை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றிருந்த மாஸ்டர் கண்ணால் சைகை காட்டி அமைதியாக இரு என்றார்.
கமல் சார் என்னை அழைத்து உன் பெயர் என்ன என்றார். நான் ஷர்மிலி என்று கூறியவுடன் அவரை நீ என்ன சொன்ன என்றார். என்ன பேசக்கூடாது சொல்றாரு, அவரு யாரு என்ன சொல்ல என்று பதிலுக்கு நான் கூறினேன். அவர் யார் தெரியுமா என்று கமல் சார் கேட்க, நான் தெரியாது என்றவுடன் அவர் இயக்குநர் என்றார். நான் ஓ அப்படியா என்று சொல்லிவிட்டு என்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டேன். அப்போது இயக்குநர் என்றால் யாரு என்றெல்லாம் எனக்கு தெரியாது.
அந்தப் படத்தில் ரேவதியோடு டயலாக் பேசுவது மாதிரி ஒரு சீன் இருக்கும். அதை யார் பேசுவது என்று வரும்போது அந்த வாயாடியை கூப்பிடுங்க என்று கமல் சார் சொன்னார். எனக்கு டயலாக் பேச தெரியாது என்று சொன்னவுடன் என்கிட்டே வாய் கிழிய பேசுனீல, இப்ப பேசு என்றார். அப்படித்தான் ஒரு காட்சியில் நான் வசனம் பேசினேன்.
நாயகன், அபூர்வ சகோதரர்கள் என க்ரூப் டான்ஸராகவே கமல் சாருடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். நான் அவரோட மிகப்பெரிய ரசிகை என்பதால் குணா படத்தில் ஒரு பாடலில் ஆட எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் அந்தப் பாடலுக்கு க்ரூப் டான்ஸராகதான் சென்றிருந்தேன். அந்தப் பாடலில் ஆட வேண்டியவர் வரவில்லை என்பதால் இவளே பார்க்க பஞ்சாபி பொண்ணு மாதிரிதான் இருக்கா, இவளே ஆடட்டும் என்று சொல்லி கமல் சார்தான் என்னை ஆடவைத்தார்". இவ்வாறு ஷர்மிலி தெரிவித்தார்.