!['I present the victory to the Chief Minister'-DMK candidate Chandrakumar interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/E7R58XDFfjmv53WS7LcDkDK4gaxqjSXgGEwq_GacTM8/1739015246/sites/default/files/inline-images/a2485.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டன.
மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ண திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. தொடர்ந்து 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றதால் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியைத் தக்க வைத்தார். நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகை இழந்தது.
மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெறுவோர் டெபாசிட் தொகையை தக்க வைப்பர். அதன்படி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு 25,777 வாக்குகள் பெற வேண்டிய நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை பெற முடியாததால் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75% வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை-1,17,158, நாம் தமிழர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை-23,872.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் சந்திரகுமார், ''இந்த வெற்றியை நான் முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். திமுகவிற்கு எப்படிப்பட்ட வெற்றியும் வரவேற்பும் கிடைத்துள்ளதோ அதேபோன்ற ஒரு தேர்தல் தான் எதிர் வருகின்ற 2026ல் தமிழ்நாடு முழுவதும் வரப்போகிறது. அப்படிப்பட்ட வெற்றியை தான் திமுக பெறப்போகிறது. எனவே இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த கட்சித் தலைவருக்கும், இளந்தலைவருக்கும், மாவட்ட அமைச்சருக்கும், எனக்காக பணியாற்றிய எங்களுடைய கூட்டணிக் கட்சியினுடைய அத்தனை தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், அத்தனை சமூக நல அமைப்புகளுக்கும் என்னுடைய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு அவதூறு கருத்துக்களை பரப்பினாலும் இறுதியில் திமுக வென்றுள்ளது. மக்கள் திமுக மீதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும், உதயநிதி மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று மட்டுமல்ல 2026லும் தமிழ்நாட்டின் முதல்வர் நீங்கள்தான், தமிழ்நாட்டின் உடைய துணை முதலமைச்சர் நீங்கள் தான் என்று சொல்லி திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி அத்தனை வாக்காளர் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை அவர்களுடைய பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன் நன்றி நன்றி'' என்றார்.