முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு பின்பு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப் பத்திரிகையில் ஏற்கனவே மணிகண்டன் மீது இருந்த 2 வழக்குகளோடு 342, 352 என இரண்டு பிரிவுகளை சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதே சமயத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டனின் பெற்றோர் வீட்டுக்கு முன்பு நடிகை சாந்தினி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிகண்டனின் குடும்பத்தினர் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சாந்தினி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரின் நலன் கருதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தவறை ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எனக்கு செட்டில்மென்ட் செய்வதாக கூறினார். அதன் அடிப்படையில் வழக்கைத் திரும்பப் பெற்றேன்.
வழக்கை வாபஸ் பெற்ற அடுத்த நாள் முதல் அவர் தலைமறைவாகிவிட்டார். 3 மாதங்களுக்கு மேலாகியும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. தற்போது அவர் மதுரையில் இருப்பதைப் பார்த்து, அவரைத் தொடர்பு கொண்டபோது என்னை கார் அருகில் செல்லுமாறும் தான் அங்கு வருவதாகவும் கூறினார். அவர் வராததால் அவரது வீட்டிற்கு சென்றேன். அவரது தாய் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் இங்கு இல்லை என்று கூறி என்னை தாக்கினர். என்னிடம் வழக்கை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபடி அவர் நடக்க வேண்டும். அதற்கு அவர் முதலில் என்னை சந்திக்க வேண்டும், அதுவரை நான் ஓயமாட்டேன். எனக்கு நீதி வேண்டும் அதுவரை போராடுவதாக தெரிவித்தார்.
இதன் பிறகு பஜார் காவல் நிலைய போலீசார் அவரை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நடிகை சாந்தினி காரில் மதுரையிலுள்ள மணிகண்டன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.