1970களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. மேலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்த இவர், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனிடையே அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜெயசுதா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஜெயசுதா, தென்னிந்திய சினிமாவுக்கு இந்திய அரசாங்கத்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரணாவத்தை ஒரு உதாரணமாக குறிப்பிட்டு பேசிய ஜெயசுதா, "பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு 10 படங்கள் நடித்து முடித்த உடனே பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆனால், பல தசாப்தங்களாக திரையுலகில் பணியாற்றிய தென்னிந்திய நடிகர்களுக்கு நடிகைகளுக்கு எந்த ஒரு உரிய அங்கீகாரமும் இந்திய அரசாங்கம் கொடுக்கவில்லை.
கங்கனா ரணாவத்துக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது தவறில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகைதான். ஆனால் நாங்கள் பல படங்களில் பணியாற்றியிருக்கிறோம், இருந்தும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநர் விஜய நிர்மலாவுக்கு கூட முறையான பாராட்டு கிடைக்கவில்லை. இந்திய அரசாங்கம் தென்னிந்திய திரையுலகினரை சில சமயங்களில் பாராட்ட தவறுவது வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.