கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் சமீபத்தில் நிறைவடைந்ததையொட்டி சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் படிப்படியாக ஆரம்பித்து களைகட்ட தொடங்கிவிட்டன. ஸ்ட்ரைக் முடிவடைந்த நாள் அன்று டிஜிட்டல் சேவை, டிக்கெட் முன்பதிவு கட்டணங்களை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குதல் என்று பல விஷயங்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தார். மேலும் நடிகர், நடிகைகளின் சம்பள குறைப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் அதிகபட்சமாக ரூ.50 கோடியும் நடிகைகள் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வாங்குவதாக குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. மேலும் பெரிய பட்ஜெட் படங்களின் பட்ஜெட்டில் பெருந்தொகை நாயகர், நாயகிகளின் சம்பளமாகத் தான் போகிறது. மேலும் ஹீரோக்களுக்கு அவர்களது முந்தைய படத்தின் வெற்றியை வைத்து மார்க்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. படங்களின் வசூலை தெளிவாக கணிக்க முடியாததால் வசூல் நிலவரம் பற்றி பல தவறான கணக்கு விவரங்கள் தமிழ் சினிமாவை சுற்றி வருகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரையரங்குகளை கணினி மயமாக்கும் நடைமுறைக்காக தயாரிப்பாளர் சங்கம் பேசி வருகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் ஒவ்வொரு கதாநாயகனின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரிய வரும். சம்பளம் அதற்கேற்ப நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். மேலும் இந்தி பட உலகில் சில கதாநாயகர்கள் தங்களது சம்பளத்தில் கால் பகுதியை மட்டும் முன்பணமாக வாங்கிக்கொண்டு படம் வியாபாரம் ஆனபிறகு அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கை பெற்றுக்கொள்கிறார்கள். படம் நல்ல விலைக்கு போனால் அதிக பணமும் குறைந்த தொகைக்கு வியாபாரம் ஆனால் குறைவான பணமும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த நடைமுறை தமிழ் சினிமாவில் வந்தால் நல்லது என்று தயாரிப்பாளர்கள் கருதி நடிகர் சங்க கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டது......அப்போது இதற்கு சில நடிகர்கள் உடன்படவில்லை என்றும், மேலும் பல தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பின்னரும் கூட சம்பள பாக்கி வைக்கிறார்கள் என்றும், இந்த சூழ்நிலையில் சம்பள முன்பணத்தை குறைவாக வாங்கி எந்த நம்பிக்கையில் நடிப்பது என்று நடிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் தயரிப்பாளர் சங்கம் சார்பில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது நடிகர்,நடிகைகள் சம்பள கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய முடிவை நடிகர், நடிகைகள் ஏற்பார்களா அல்லது மேல் முறையீடு செய்வார்களா என்று நடிகர் சங்கம் சார்பாக விரைவில் தெரிவிக்கப்படும் என்று திரை உலகில் பரவலாக பேசப்படுகிறது.