![actor nani has expressed his desire act maniratnam film](http://image.nakkheeran.in/cdn/farfuture/QYx-lysAdTMyMzizpsb8tGFulT0ze77m-qgG5_c9Ckg/1639735484/sites/default/files/inline-images/naani.jpg)
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (16.12.2021) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் நானி, "தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதேபோல தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. என்னுடைய நடிப்பில் வெளியான 'நான் ஈ' படத்திற்குத் தமிழ் ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்தீர்கள். ஆனால் எனது அடுத்த படங்களான ‘வெப்பம்’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகியவை தமிழில் வெற்றிபெறவில்லை. ஆகையால் தெலுங்கில் கவனம் செலுத்திவிட்டு சரியான படத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்காக காத்திருந்தேன். அதற்குப் பலனாகத்தான் ‘ஷியாம் சிங்கா ராய்’ படம் தமிழில் வெளியாகவுள்ளது. மணிரத்னம் சார் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் இயக்கத்தில் நடிப்பது என்னுடைய நீண்ட நாள் கனவு” எனத் தெரிவித்துள்ளார்.