![actor marimuthu talk about vishal starring Veeramae Vaagai Soodum movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/zCoVNpNZFyhqodBoG9PDMc339G68HLAU1G4tO7UFR70/1642660338/sites/default/files/inline-images/maarimuthu.jpg)
அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சிறு முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை படக்குழு நேற்று(19.1.2022) வெளியிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் மாரிமுத்து கூறுகையில், "ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருதுவில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் படப்பிடிப்பின் போது விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி சார் வந்திருந்தார். அப்போது நான் கை கொடுத்தேன், அவரும் கொடுத்தார். 3 நாட்களுக்கு கை வலித்தது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படி என்றால் மகனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். விஷால் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு அடியும் தூள் பறக்கிறது. விஷால் படிப்பிடிப்பு தளத்தில் இப்படத்தின் இரண்டு சண்டை காட்சிகளைக் காட்டினார். பார்த்ததும் மிரண்டு போனேன். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இயக்குநர் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் போட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் அதிக செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் நடத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் யூடியூப் தளத்தில் 1.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.