'மத்தகம்' படம் குறித்து மற்றும் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் மணிகண்டன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அடுத்த படத்துக்கான பூஜை போடும்போது யாரை அழைக்கலாம் என்று யோசித்தோம். விஜய் சேதுபதி அண்ணாவை அழைக்கலாம் என்று நான் சொன்னேன். நாளை பூஜை என்றால் இன்று தான் அவரிடம் தகவல் சொன்னேன். அவரை நான் நேரில் சென்று கூட அழைக்கவில்லை. மெசேஜ் தான் அனுப்பினேன். நேரில் சென்று அழைக்காமல் விட்டது தவறு என்பதை நான் இப்போது உணர்கிறேன். எதுபற்றியும் சிந்திக்காமல் அவர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அவருடைய மனம் மிகப்பெரியது. இருந்தாலும் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பொறுப்பு என்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொறுப்பெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். உங்களுக்கு இப்போது பொறுப்பு அதிகமாகிவிட்டதே என்று இப்போது யாராவது கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. நான் இன்னும் மிகப்பெரிய நடிகராக வரவில்லை என்று நினைக்கிறேன். எம்மாதிரியான படங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பது எனக்கு புதிதாக இருக்கிறது. அதற்கு நான் தயாராகி வருகிறேன்.
கதைகளில் குறிப்பிட்ட எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. எதிலும் சுருங்கிவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். 'மத்தகம்' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பானது. இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. எனக்கு இதில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. இந்த கேரக்டரின் ஆழத்தை நான் கண்டறிவதற்கு எனக்கு நேரம் எடுத்தது. இதில் அடிதடி சண்டையை விட சித்தாந்த சண்டை தான் அதிகம் இருக்கும். காலா படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாகவே இருந்தது.
ஒவ்வொரு வசனமும் ரஜினி சார் பேசும்போது வேறு ஒரு வலிமையான வடிவத்துக்கு மாறும். இத்தனை வருடங்களாக அவர் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார். நடிகர்களை ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கலாம். ஆனால் தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கியம். ரசிக சண்டைகளால் நேரம் தான் வீணாகும். அதர்வா அனைவரிடமும் சமமாகப் பழகக் கூடியவர். எப்போதும் அன்புடன் இருப்பார். ஸ்டண்ட் காட்சிகளில் நம்மை அவ்வளவு பரிவுடன் கவனித்துக் கொள்வார். கடினமான உழைப்பாளி. அவருடைய பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.