வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் கன்னட நடிகர் கிஷோர். இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே 'போர்க்களம்', 'ஹரிதாஸ்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'காந்தாரா' படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் கிஷோர் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவார். குறிப்பாக மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துக்களைக் கூறி வந்தார். இதையடுத்து சமீபத்தில் கிஷோர் ட்விட்டர் விதிமுறைகளை மீறியுள்ளதாக அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. இதற்கு கிஷோரின் பதிவு தான் காரணம் எனப் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிஷோர் விளக்கமளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருப்பது, "எனது பதிவினால் ஒன்றும் என் ட்விட்டர் கணக்கு முடக்கப்படவில்லை. கடந்த மாதம் 20 ஆம் தேதி எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திடம் பேசினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.