ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் கணேஷ் பிரபுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்; திரை அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய கனவுக்கான கதவைத் திறந்துவிட்டது 'ஜெயிலர்' படம். சினிமாவே வேண்டாம் என்று நினைத்து ஓடிய காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால் அதே வேகத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். பல்வேறு தடைகளுக்குப் பிறகு ஜெயிலர் போன்ற ஒரு மாஸ் படத்தின் அறிமுகக் காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. நினைத்து நினைத்து சந்தோஷப்படக்கூடிய விஷயம் இது. ஒரு காட்சியில் நடித்தாலும் மிகுந்த மனநிறைவைத் தந்த அனுபவம் இது. சினிமாவுக்குள் வரவேண்டும் என்கிற ஆசை எப்போதுமே இருந்தது.
என்னுடைய சொந்த ஊர் மதுரை. சினிமா மீது ஆசை இருந்ததே தவிர, அதை எப்படி அடைய வேண்டும் என்பது தெரியவில்லை. என்னுடைய நண்பர்களின் ரசனையும் ஆலோசனைகளும் தான் எனக்கு உத்வேகம் தந்தது. ரகுவரன் சாரின் குரலில் நன்றாக மிமிக்ரி செய்வேன். ரகுவரன் சார், எம்.ஆர்.ராதா சார் ஆகியோரின் மீது ஈர்ப்பு வந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு என்னுடைய போராட்டம் அதிகமானது. கவிஞர் நா.முத்துக்குமார் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரும் நானும் ஒன்றாகவே இருந்தோம்.
ஒருகட்டத்தில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் சக போட்டியாளர்களாக இருந்தனர். அவர்கள் இப்போது பெரிய உயரத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயிலர் படத்தில் நான் நடிப்பது குறித்து நண்பர்களிடம் கூட அதிகம் பகிரவில்லை. படத்தின் முதல் ஷாட்டில் நான் வந்தது எனக்கான மிகப்பெரிய கொடுப்பினை. நீண்ட நாள் கனவு இது. நெல்சன் மிகவும் கூலான ஒரு டைரக்டர். அவருடன் வேலை செய்தது மகிழ்ச்சியான அனுபவம்.
இதற்கு முன்பு பிச்சைக்காரன், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன். எமன் படத்தில் நான் நடித்த காட்சி நன்கு பேசப்பட்டது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நான் நடித்த காட்சி சில நொடிகள் மட்டும் தான் திரையில் வரும். ஆனாலும் அதில் தோன்றியதே எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தனையோ பேருக்கு திரையில் தோன்றுவது தான் கனவு. அது நமக்கு நடந்திருக்கிறது என்பதே சந்தோஷம். என்னுடைய காட்சி சில நொடிகளே வந்ததற்கு இயக்குநர் சசி சார் என்னிடம் மன்னிப்பு கேட்டார். பெரிய மனது அவருக்கு.