சென்னையில் கடந்த 13ஆம் தேதி ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20), சதீஷ் என்ற இளைஞர் மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளி சதீஷை அன்று இரவுக்குள் காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே சத்யாவின் தந்தை மாணிக்கம், மகள் இறந்த துக்கத்தில் மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி குழுவினர் தங்கள் விசாரணையை தொடங்கி தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷிற்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் ஆண்டனி, "கொலையாளியை ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும்படி" கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் திரைப்பட நடிகர் தாமு இந்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார். மதுரையில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி அவர்கள் முன்பு உரையாற்றினார் தாமு.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாமு, "மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது, பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது, நீதி போதனைகளை பள்ளி வகுப்பிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சினிமாத் துறையினர் அக்கறை காட்ட வேண்டும், சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தாக்கம் ஏற்படும். எனவே இதுபோன்ற காட்சிகளை தவிர்க்கவேண்டும். சினிமா மூலம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்" என பேசியுள்ளார்.