![actor dev patel joining muttiah muralitharan biopic 800 movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/1kjZMFb9gmUoYryiBGWYaNV_TwvTis9ryI3xeR3fU0A/1641879502/sites/default/files/inline-images/dev_0.jpg)
பாலிவுட் திரையுலகில் ஆண்டுதோறும் பல்வேறு பயோபிக் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை படமாக்க இயக்குநர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சச்சின், அசாருதீன், தோனி என இதுவரை வெளியான கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில் அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் திரைப்படம் '800' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து '800' படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி விலகிய கதாபாத்திரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நடிகர் தேவ் பட்டேல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'ஹோட்டல் மும்பை', 'சாப்பி' படங்களில் நடித்துள்ளார். தேவ் பட்டேல் தற்போது 'மங்கி மேன்' என்ற ஆங்கில படத்தை எழுதி இயக்கி மற்றும் நடித்தும் வருகிறார்.