Skip to main content

“விஷமுள்ள பாம்பின் தலை என்பது சல்மான் குடும்பம்தான்”- தபாங் இயக்குனர் காட்டம்!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

salman khan


எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு, அதிகாரத்தில் இருக்கும் நடிகர்கள்தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பரிபோனதற்கு சல்மான் குடும்பம்தான் காரணம் என 'தபாங்' முதலாம் பாகத்தின் இயக்குனர் அபினவ் காஷ்யப் நீண்ட பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை நம்மில் பலர் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சனையை முன்னால் கொண்டு வந்துள்ளது. எது ஒருவரைத் தற்கொலை செய்ய வற்புறுத்தியிருக்கும்? மீடூ (Me Too) இயக்கம் மாதிரி சுஷாந்தின் மரணமும் பாலிவுட்டில் இருக்கும் பெரிய நோயைப் பற்றிய சிறு துளிதான் என்று அச்சப்படுகிறேன்.

சுஷாந்தின் மரணம், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் திறமைகளுக்கு வாய்ப்பு தரும் நிறுவனத்தைக் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. சுஷாந்தை தற்கொலைக்குத் தள்ளியதில் இந்த நிறுவனத்துக்குப் பங்கிருக்கிறதா இல்லையா என்பதை அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும். அவர்கள் திறமைகளுக்கு வாய்ப்பை, தொழிலைத் தருவதில்லை. அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை நாசம் செய்கின்றனர்.

இதுபோன்ற திறமைகளைத் தேடும் நிறுவனமும், அதற்கான மேலாளர்களும் கலைஞர்களின் உயிரைப் பறிக்கும் படுகுழியாக மாறும் சாத்தியங்கள் உள்ளன. மோசடி மற்றும் துன்புறுத்தலை நானே தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன் நான் 'தபாங் 2' இயக்காமல் போனதற்குக் காரணம், அர்பாஸ் கானும், சொஹைல் கானும் சேர்ந்து என்னைத் துன்புறுத்தி என் திரை வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

அஷ்டவிநாயக் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் நான் ஒப்பந்தம் செய்திருந்த எனது இரண்டாவது பட வாய்ப்பை அர்பாஸ்கான் தடுத்தார். அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜ் மேத்தாவை அழைத்து, என்னை வைத்துப் படம் தயாரித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டினார். நான் அவர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாயிற்று. பின் வயாகாம் பிக்சர்ஸில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அங்கும் இதையே செய்தார்கள்.

ஆனால், இம்முறை இந்தக் காரியத்தைச் செய்தது சொஹைல் கான். அவர் வயகாம் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் மல்ஹோத்ராவை மிரட்டினார். என் படம் நாசமானது. நான் வாங்கிய முன்பணம் ரூ.7 கோடியை வட்டி ரூ.90 லட்சத்துடன் கொடுக்க வேண்டியதானது. ரிலையன்ஸ் என்னைக் காப்பாற்ற வந்தது. நாங்கள் இணைந்து 'பேஷாராம்' திரைப்படத்தை எடுத்தோம்.

ஆனால், சல்மான் கானும் அவர் குடும்பமும் படத்தின் வெளியீட்டைக் கெடுத்தனர். அவர்களின் மக்கள் தொடர்பாளர்களைக் கொண்டு எனக்கு எதிராகவும் என் படத்துக்கு எதிராகவும், வெளியீட்டுக்கு முன்னரே அவதூறு செய்திகள் பரப்பினர். இது படத்தை வாங்கவிருந்த விநியோகஸ்தர்களைப் பயமுறுத்தியது. நானும் ரிலையன்ஸ் நிறுவனமும் தைரியமாக படத்தை வெளியிட்டோம். ஆனால், அந்தப் போராட்டம் அப்போதுதான் தொடங்கியது.

எனது பல எதிரிகள், படத்துக்கு எதிரான எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து பரப்ப ஆரம்பித்தனர். அது எனது படத்தின் வசூல் பாதிப்படையும் வரை தொடர்ந்தது. ஆனால் 'பேஷாராம்' திரையரங்குகளை விட்டு வெளியேறும் முன்னர் 58 கோடி ரூபாயை வசூல் செய்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிதான்.

எனவே அவர்கள் தொடர்ந்தனர். படம் வெளியாவதற்கு முன்னரே ஜீ ஃபிலிம்ஸுக்காக விற்கப்பட்டது. அதைக் கெடுக்க முற்பட்டனர். மீண்டும் பேரம் பேசப்பட்டு தொலைக்காட்சி உரிம விலை குறைக்கப்பட்டது.

அடுத்த சில வருடங்களுக்கு எனது அனைத்து முயற்சிகளும் கெடுக்கப்பட்டன. எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டலும், என் குடும்பத்தில் இருக்கும் பெண் உறுப்பினர்களுக்கு பாலியல் ரீதியிலான மிரட்டலும் தொடர்ந்தன.

தொடர்ந்த அச்சுறுத்தல் எனது மன நலனை, என் குடும்பத்தின் மன நலனைக் கடுமையாகப் பாதித்தது. அது என் விவாகரத்து வரை இட்டுச் சென்று 2017-ஆம் ஆண்டு எனது குடும்பத்தை உடைத்தது. இதில் சில அச்சுறுத்தல்களை பல்வேறு எண்களிலிருந்து எனக்கு மெசேஜ் வடிவில் அனுப்பினார்கள். இந்த ஆதாரத்தை வைத்து 2017-ஆம் ஆண்டு நான் காவல்துறைக்குச் சென்று புகார் செய்தேன். ஆனால், அவர்கள் எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவு செய்யவில்லை. அச்சுறுத்தல்கள் தொடர்ந்தபோது நான் காவல்துறை தரப்பைக் கட்டாயப்படுத்தி அந்த எண்கள் யாருடையது என்று கண்டுபிடித்தேன். ஆனால் அவற்றை நான் சந்தேகப்பட்ட சொஹைல் கானுடன் தொடர்புபடுத்த முடியவில்லை. இன்று வரை நான் கொடுத்த புகார் விசாரிக்கப்படாமலேயே உள்ளது. என்னிடம் இன்னும் ஆதாரம் உள்ளது.

எனது எதிரிகள் சாமர்த்தியமானவர்கள், தந்திரமானவர்கள். மறைந்திருந்து, பின்னால் வந்துதான் என்னை எப்போதும் தாக்குவார்கள். ஆனால், 10 வருடங்கள் கழித்து நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், எனக்கு என் எதிரிகள் யார் என்று தெரியும். உங்களுக்கும் யாரென்று தெரியட்டும்.

அவர்கள் சலீம் கான், சல்மான் கான், அர்பாஸ் கான் மற்றும் சொஹைல் கான் ஆகியோர். இன்னும் சிலர் இருக்கின்றனர். ஆனால் இந்த விஷமுள்ள பாம்பின் தலை என்பது சல்மான்கானின் குடும்பம்தான். அவர்களுக்குத் தவறான வழியில் கிடைத்த பணம், அரசியல் பலம், அண்டர்வேர்ல்ட் தொடர்பு ஆகியவற்றைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி யாரையும், எவரையும் அச்சுறுத்துவார்கள்.

துரதிர்ஷ்டவசமாக உண்மை என் பக்கம் உள்ளது. நான் சுஷாந்த் சிங் ராஜ்புத் போல விட்டு விடப்போவதில்லை. நான் அச்சுறுத்தலுக்குப் பணிய மாட்டேன். அவர்களா நானா என்ற முடிவு தெரியும் வரை தொடர்ந்து போராடுவேன். சகித்துக்கொண்டது போதும். இது சண்டையிடுவதற்கான நேரம்.
 

http://onelink.to/nknapp


இது அச்சுறுத்தல் அல்ல. வெளிப்படையான சவால். சுஷாந்த் சிங் ராஜ்புத் விட்டுக்கொடுத்து இங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவர் எங்கிருந்தாலும் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நம்புகிறேன்.

ஆனால், பாலிவுட்டில் வாய்ப்பின்றி, கண்ணியமின்றி இன்னொரு அப்பாவி உயிர் தன்னை மாய்த்துக்கொள்ளாது என்பதை நான் உறுதி செய்வேன். அவதிப்படும் நடிகர்களும், கலைஞர்களும் எனது பதிவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள் என்று நம்புகிறேன்.

பொழுதுபோக்குத் துறையை ஆதரிக்கும் ஊடகங்களும், மக்களும் கூட பகிர்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்