Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 7

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
vietnam-travel-series-part-7

இன்றைய நவீன சூழலில் ஆண், பெண் பேதமின்றி உடல் பருமன் கூடுவதை உலகம் முழுக்க பார்க்க முடிகிறது. அதேபோல், உடல் பருமனை குறைக்க ஃபிட்னஸ் ஜிம்களும் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், வியட்நாம் பெண்கள் இதற்கு நேர் எதிராக உள்ளார்கள். நாடு முழுவதும் நான் பார்த்தவரை 99 சதவீத பெண்கள் பருமனற்று இருக்கிறார்கள். அதேபோல், வியட்நாம் தேசத்தில் நான் சுற்றிய பகுதிகளில் அப்படியொரு ஜிம்களை பார்க்கவே முடியவில்லை. 

உடல் பருமனில் ஆண் பெண் பேதமின்றி இருக்கும்போது, ஏன் பெண்ணைப் பற்றி சொல்கிறேன் என்றால், சீன குடியேற்றத்துக்கு முன்பு வரை தாய்வழி சமூகமாகவே இருந்த வியட்நாம் பகுதிகள், சீனர்களின் ஆட்சிக் காலத்தில் ஆண் வழிச் சமூகமாக மாறுகிறது. அதேசமயம், ஆண்களுக்கு ஈக்வலாக பெண்கள் இங்கும் உழைக்கிறார்கள். ஹோட்டல்கள், உணவு விடுதிகள், சமையல் கூடங்கள், வியாபார கடைகள் எனப் பலவற்றிலும் பெண்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தனர். உணவு சமைக்கும் இடத்தில் கண்டிப்பாக பெண்கள் உள்ளனர். சமையலுக்கு பெண்கள் கிடைப்பதில்லை என்றார்கள் ஹோட்டல்காரர்கள் அந்தளவுக்கு பெண்கள் உழைப்பாளிகளாக உள்ளனர். ஆனால், நாட்டின் மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உள்ளார்கள். 

vietnam-travel-series-part-7

உலகமயமாதலுக்குப் பிறகு உடைகள் உட்பட அனைத்திலும் உலகம் மாற்றத்தைக் கண்டு வரும்போது, இங்குள்ளவர்களின் உடைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவர்களின் பாரம்பரிய உடைக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆண்கள், பெண்கள் என இருதரப்பினருமே அந்நியர்களை காணும்போது கோவத்துடன் அவர்களைப் பார்ப்பதில்லை. எப்போதும் அவர்கள் முகத்தில் சிறு புன்னகை தவழ்ந்துகொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்தபடி பெண்களின் சிரிப்பை ரசித்தபடி காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, கார் சைமன் சென்ட்ரல் (பிரெஞ்ச் வார்த்தையில் சிறைச்சாலை) வாசல் முன் வந்து நின்றது. நம்மை பார்த்து ஆங்கிலத்தில் இறங்குங்க என்றார் ஓட்டுநர். கீழே இறங்கி கைடு எங்கே என கண்கள் தேடியது. சில அடி தூரத்தில் பூத்தில் அமர்ந்திருந்த காவலரிடம், நம்மை சுட்டிக்காட்டி உரையாடிக்கொண்டு இருந்தார். ஒரு நிமிடம் மனம் பக்கென அடித்தது. பிறகு சுற்றுமுற்றும் பார்த்தபோது, அது சிறைச் சாலையில்லை சிறை அருங்காட்சியகம் என்று தெரியவந்தது. அதன்பிறகே மனம் அமைதியானது. 

vietnam-travel-series-part-7

இவ்வளவு நேரம் அழகான பெண்களை, பிரகாசமான புன்னகை முகத்தை ரசித்தீர்கள் தானே, அவர்களின் மற்றொரு பக்கத்தையும் பாருங்கள் என சிறைச்சாலைக்குள் அழைத்து சென்றார் சுற்றுலா வழிகாட்டி. ‘சைமன் சென்ட்ரல்’ என அழைக்கப்பட்ட ‘ஹோவா லோ சிறை’, வியட்நாம் பிரெஞ்சு இந்தோசீனாவின் ஒரு பகுதியாக இருந்தபோது, ஹனாய் நகரில் பிரெஞ்ச் ஆட்சியாளர்களால் 1886இல் கட்டத் தொடங்கி 1901இல் முடித்தனர். 12,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை ஒரு காலத்தில் இந்தோசீனாவில் உடைக்க முடியாத சிறையாகக் கருதப்பட்டது. 4 மீட்டர் உயரமும் 0.5 மீட்டர் தடிமனும் கொண்டு சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டிருந்திருக்கிறது. சிறைவாசிகள் தப்பிக்காமல் இருக்க சுவர்கள் மேல் உடைந்த கண்ணாடி மற்றும் உயர் மின்னழுத்த மின்சார முள் கம்பிகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. சிறைச் சாலையின் நான்கு மூலைகளிலும் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன. சிறைச்சாலையின் உள்ளேயே ஒரு காவலர் இல்லம், மருத்துவமனை, இரும்பு மற்றும் ஜவுளி தயாரிக்கும் பகுதி, குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை அடைக்க தனியாக 7 பெரிய அறைகள் இருந்தன. 

vietnam-travel-series-part-7

இதையெல்லாம் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தபோது சுற்றுலா வழிகாட்டி, சிறையின் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடம் முழுக்க இருட்டாக இருந்தது. பராமரிப்பு இன்றி இப்படி இருக்கிறதா எனக் கேட்டபோது, அந்த இருட்டின் உள்ளே இருந்த பயங்கரங்களையும், அந்த இருட்டிலிருந்து வியட்நாமுக்கு கிடைத்த ஒளிகளையும் பற்றிச் சொன்னார். கேட்கும்போதே உடல் தசைகள் எல்லாம் சில்லிட்டது. அந்த இருட்டில் நடந்த பயங்கரங்கள் என்ன?

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம். – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 6