Skip to main content

77 வயது பாட்டி முதல் 15 வயது சிறுவன் வரை; அறைக்குள் நடந்தது என்ன? - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :79

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
thilagavathi ips rtd thadayam 79

இந்தியாவையே உலுக்கிய சம்பவமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்தது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

இந்தியாவையே கலங்கச் செய்த வழக்கு இது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், இறந்துவிடுகிறார்கள். இந்த 11 பேர் இறந்தது எப்படி? என்பதை தான் பார்க்கப் போகிறோம். வடக்கு டெல்லி, சந்த் பகுதியில் 3 அடுக்கு மாடியில் வசிக்கக்கூடிய குடும்பம் இருக்கிறது. வீட்டில் கீழ்பகுதியில், மளிகை கடை, பிளைவுட் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த 50 வயது கொண்ட பவ்னேஷ் என்ற நபர், வழக்கமாக கீழ்பகுதியில் உள்ள கடைகளை காலை 5 மணிக்கு திறந்துவிடுவார். ஆனால், 2018 ஜூலை 1ஆம் தேதி அன்று காலை நேரமாகியும் அந்த கடை திறக்கப்படாமல் இருக்கிறது. இதனை கவனித்து சந்தேகமடைந்த அந்த தெருவில் உள்ள குருபச்சன் சிங் என்பவர், அந்த வீட்டின் மாடியில் ஏறி அவர்கள் குடியிருந்த அறையின் உள்ளே சென்று பார்க்கிறார். 11 பேர் இருந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும் வட்டமான வடிவில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார். உடனே, இது குறித்து அந்த தெருவில் உள்ள மற்றவர்களிடம் சொல்லி, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கின்றனர். 

அந்த தகவலின் பேரில், புராரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வீடு முழுவதும் சோதனை தடயங்களை சேகரிக்கின்றனர். கை, கால்கள் கட்டுப்பட்டு, வாய் பகுதியை பிளாஸ்டிக்கை வைத்து மூடியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த அவர்களை, பாரன்ஸிக் ஆபிஸர் போட்டோக்கள் எடுத்த பின்னா, போலீசார் அந்த வீடு முழுவதுமே சோதனை செய்கிறார்கள். அதில், பக்கத்து அறையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 75 வயது பாட்டி, கழுத்து நெரிப்பட்டு விழுந்து கிடக்கிறார். 10 பேர் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் கீழ் 5 ஸ்டூல் இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, எதனால் இந்த கொலைகள் நடந்திருக்கக்கூடும் அல்லது தாமாகவே இவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்களா என பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

பவ்னேஷ் (50), அவரது தம்பி லலித் (45), புவனேஷினுடைய மனைவி (48), லலித்தின் மனைவி டீனா (42), பவ்னேஷுக்கு 25 வயதிலும், 23 வயதிலும் இரண்டு மகள் மற்றும் 15 வயதில் துருவ் என்ற மகன், லலித்தின் மகன் சிவம் (15), பவ்னேஷினுடைய அக்கா பிரதிபா, அக்காவினுடைய மகள் பிரியங்கா (33) ஆகிய 10 பேரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து அறையில், பவ்னேஷினுடைய அம்மா நாராயணி(77) தேவி கழுத்து நெரிப்பட்டு இறந்துக்கிடக்கிறார். கோபால் சிங்கை திருமணம் செய்துகொண்ட நாராயணி தேவிக்கு தினேஷ் சிங், சுஜாதா,பவ்னேஷ், லலித் மற்றும் பிரதிபா என 5 குழந்தை பிறக்கிறது. தினேஷ் சிங் ராஜாஸ்தானிலும், சுஜாதா தனது கணவரோடு வெளியே இருக்கின்றனர் எனத் தெரிகிறது. 11 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மிக பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்ட அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை மீட்டு போலீசார் ஆய்வு செய்கின்றனர். இது ஒருபுறமிருக்க, வீட்டில் ஏதேனும் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்களா என்பதற்காக வீடு முழுவதும் தேடுகிறார்கள். அப்படி தேடும் போது 11 டைரி கிடைக்கிறது. இறந்துபோனவர்கள் 11, தூக்கு மாட்டிக்கொள்வதற்காக போடப்பட்டிருந்த கருவி 11, டைரி 11, வீட்டில் கதவின் போட்டிருந்த கிராதி எண் 11, வீட்டின் ஜன்னல்கள் 11, இப்படியாக எல்லாமும் 11 ஆக இருப்பதால் இந்த கேஸில் மர்மம் இருப்பதாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக 200 பேரை காவல்துறையினர் விசாரிக்கிறார்கள். மேலும், கைப்பற்றிய 11 டைரியில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு வரி விடாமல் படித்து கையெழுத்து நிபுணர் ஆராய்ச்சிக்கு அனுப்புகிறார்கள். அதில், பவ்னேஷுடைய மூத்த மகள் நீட்டு்வும், பிரியங்காவும் தான் இந்த டைரியை எழுதியுள்ளார்கள் என்பது தெரிந்தது. அவர்கள் என்ன எழுத வேண்டும் என்பதை லலித் தான் சொல்வார். லலித்துக்கு தொண்டையில் சிக்கல் இருப்பதால் அவரால் பேச முடியாமல் இருந்தார். லலித்துடைய அப்பா 2007இல் இறந்ததற்கு பின்னால், வீட்டில் பூஜை பரிகாரம் செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு நாள், சாமி மந்திரங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த போது, திடீரென்று லலித்துக்கு குரல் வந்து பேசத் தொடங்கியுள்ளார். இப்போது வந்த குரல், லலித்துடைய குரலாக இல்லாமல், இறந்துபோன கோபால் சிங்கின் குரல் மாதிரியாக இருக்கிறது. .

இதனால், அப்பாவுடைய ஆவி தன்னுள் புகுந்ததாகவும், அப்பா தான் தன் மூலமாக பேசுகிறார் என்று லலித் அடிக்கடி சொல்லி வந்துள்ளார். எப்போதும் பூஜையை சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்று லலித் சொன்னதன் பேரில், குடும்பம் முழுவதும் காலை 8 மணிக்கு ஒரு பூஜையும், இரவு 9 மணிக்கு ஒரு பூஜையும் செய்கின்றனர். இப்படியாக பூஜை செய்துக் கொண்டிருக்கும் போது நாளடைவில், லலித் நிறைய ரூல்ஸ்களை கொண்டு வருகிறார். இப்படி தான் நிற்க வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் அவர்களிடம் சொல்லி அவர்களை ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இதையெல்லாம், அப்பா தான் சொல்கிறார் என்று லலித் சொல்ல சொல்ல, அனைத்தையும் பிரியங்காவும் நீட்டுவும் டைரியில் எழுதிக்கொள்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நடவடிக்கைகளை கவனித்து யார் தவறு செய்தாலும், அதை குறிப்பிட்டு தவறுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று டைரியில் எழுதச் சொல்வார். அதன் பேரில், இரண்டு பெண்களும் எழுதி வைப்பார்கள். இது ஒரு குடும்ப ரகசியம் என்றும் தேவ ரகசியம் என்று சொல்லி இது பற்றி வெளியில் உள்ள யாரிடமும் சொல்லக்கூடாது என்ற கட்டளையும் விதிக்கிறார். அப்பா தான் இதை லலித் மூலமாக சொல்கிறார் என்று குடும்பத்தினர் அனைவரும் நம்பி அவர் சொல்படி நடக்கின்றனர். அப்படி நடக்கையில், குடும்பத்தில் சில முன்னேற்றங்கள் நடப்பது மாதிரியாக இவர்களுக்கு தெரிகிறது. 1 கடை வைத்திருந்த அவர்கள் மூன்று கடைகள் வைக்கின்றனர், திருமணமாகாமல் இருந்த பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது, இப்படியாக முன்னேற்றங்கள் நடக்கிறது. 11 பேர் இறந்ததற்கு 15 நாட்களுக்கு முன்பு, பிரியங்காவுக்கு மிகப்பெரிய திருவிழா போல் நிச்சயதார்த்தம் நடக்கிறது. குடும்பத்தில் எந்த விஷயமாக இருந்தாலும், அதை லலித் தான் முடிவு எடுப்பார். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..