சமீபத்தில் எனது நாட்டில் நடைபெற்ற இரண்டு கடுமையான நிகழ்வுகள், ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மடமடவென சரிந்து விழுவதைப் போல, நடுத்தெருவில் ஒரு மனிதன் ஆடையின்றி அம்மணமாய் நிற்பதுபோல, பூர்ஷ்வா ஒழுக்கத்தின் அடிப்படையையே தகர்க்கும் சம்பங்கள் அவை.
இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் இது நடந்தது. ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொருவர் விடுவிக்கப்பட்டார். இந்த இரண்டு வழக்ககளுமே, நீதியின் குணத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது! சிலி நாட்டில் மட்டுமல்ல, பல மேற்கத்திய நாடுகளிலும் கூட இதுதான் நீதியின் குணம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நாகுஎல்டோரோ என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி விவசாயத் தொழிலாளி ஒருவர், ஒரு கடுமையான குற்றத்தைச் செய்து விட்டார். அடக்க முடியாத கோபத்தின் வெளிப்பாட்டால், இரண்டு குழந்தைகள் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் வெட்டிக் கொன்றார்.
இந்த துயரம் நடந்த கிராமம், மிகவும் தொலைதூரத்தில் உள்ள கிராமம். இந்த சம்பவத்திற்கு முன்னர், சிலி தேசத்தவர் இந்த கிராமத்தின் பெயரைக்கூட கேள்விப்பட்டது இல்லை. சிலியின் வரைபடத்தில் கூட இந்த கிராமம் இடம் பெறவில்லை.
ஆனால், இறைவனால் வஞ்சிக்கப்பட்ட இந்த நாகுஎல்டோரோ கிராமம், மனித துயரம் எனும் வரைபடத்தில் தற்போது ரத்தத்தால் வரையப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கிராம மக்களும், அருகில் உள்ளவர்களும், காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, அறியாமை நிலையில் இருக்கும் இவர்கள், முற்றிலும் எழுத்தறிவு இல்லாதவர்கள். அவர்களது அழுக்குக் குழந்தைகள், வெற்றுக் கால்களுடன் திரிகிறார்கள். அப்பகுதியைச் சேர்ந்த நிலபிரபுக்கள், வெகுதொலைவில், தலைநகரில், தங்களுக்கு சொந்தமான ஆடம்பரம் மிக்க மேன்சன்களில் வாழ்கிறார்கள். கடும் பனி மூட்டத்தில் சிக்கிய இடத்தைப் போல, அந்த கிராமத்தை மவுனம் போர்த்தி மூடியிருக்கிறது.
இங்குதான் ஜோஸ் டெல் கார்மென் வாலென்சுவேலா என்ற இந்த இளம் குற்றவாளி பிறந்து வளர்ந்தான். கொலை செய்துவிட்டு சாலையில் படுத்துக்கிடந்த போது போலீஸார் இவனைக் கண்டுபிடித்தனர். அவனுக்கு அருகில் கொஞ்சம் உணவு மற்றும் ஒயின்தான் அவனுக்கு அருகில் கிடந்தன. அவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். அவனோ, தான் செய்த குற்றத்தையே மறந்தவனாய், அமைதியாக தூங்கிகொண்டிருந்தான்.
நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை நடந்தது. இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில், வாலென்சுவேலா படிக்கவும், தன்னை மற்றவர்கள் தவிர்க்காத விதத்தில் பேசவும் கற்றுக் கொண்டான். நீதியின் அரண்மனையில், அதிகாரிகள் இவனது வழக்கை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அவனது மரண தண்டனையை பக்கம் பக்கமாக தயாரித்துக் கொண்டிருந்தனர். இந்தக் காலட்டத்தில் அந்த மனிதன், தனது முகத்தை எப்படிக் கழுவுவது என்று கற்றுக் கொண்டிருந்தான். டேபிளில் உட்கார்ந்து எப்படிச் சாப்பிடுவது, மற்ற பல குற்றங்களுக்காக சிறைக்குள் வந்திருக்கிற சில நல்ல மனிதர்களுக்கு நன்றி சொல்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்தான். சுருங்கச் சொன்னால், அவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைதாகும்போது அறியப்பட்டதைவிட மிகவும் மாறிப்போனான். அத்தகைய மாற்றத்தின் சாரம் என்ன?
மிகவும் தாமதம் என்ற போதும், அவன் இப்போதுதான் மனிதனாகிக் கொண்டிருந்தான். கடந்த காலத்தில், அவன் ஒரு சபிக்கப்பட்ட வனவிலங்காகவோ, ஒரு தாவரமாகவோ, சிலியின் மலைகளில் வளர்ந்திருக்கும் மரங்களைப் போலவோ வாழ்ந்து கொண்டிருந்தான். சிறையில் இருக்கும் போதுதான், மிகமிகத் தாமதமானாலும் கூட, எப்படிச் சிரிப்பது என்றே கற்றுக்கொண்டான்.
மரணதண்டனை நாள் வந்தது. “நாகுஎல்டோரோ கிராமத்து கொலையாளி”க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட அந்த ‘ஓநாய்’ தரையில் வீழ்ந்தான் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
அதேநாளில் ஹெர்மன் ரவுச் என்ற மற்றொரு மனிதன் முற்றிலும் விடுதலை செய்யப்பட்டான். வாலென்சுவேலாவைப் போலவே, அவனும் மக்களை கொன்றவன்தான். அதிலும் அப்பாவி யூதர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தவன். ஹிட்லரின் நாஜி அரசாங்கத்தில் நடமாடும் விஷவாயு வாகனங்களைப் பயன்படுத்தி கொலை செய்தவன்.
இரண்டாம் உலகப்போர் முடிவில் இவன் ஜெர்மனியிலிருந்து தப்பி சிலி நாட்டில் வாழ்ந்து வந்தான். பல போர்க் குற்றவாளிகளைப் போலவே இவனும் தனது நாட்டவர்களால் காப்பாற்றப்பட்டான். வேறு பெயரில் பல ஆண்டுகள் சிலியில் வாழ்ந்தான். சிலியிலிருந்து பலமுறை மேற்கு ஜெர்மனிக்கு சென்று திரும்பியிருக்கிறான். ஆனால், திடீரென்று ஒருநாள் சிலியின் சட்ட அமலாக்க அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டான்.
அவனால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைத்திருந்த ஒருவர், தெருவில் நடமாடிய அவனை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தினார். சிலி நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில், ஒரு லட்சம் மனிதர்களின் சாவுக்கு காரணமானவன் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவனது “கொலைகள்”, வியன்னாவில் இருந்து சோவியத் உக்ரைன் வரையிலும் மிகப்பெரிய அளவில் நடந்திருப்பது தெரியவந்தது.
வழக்கு விசாரணையில், அவன் விஷவாயு வாகனங்களை சொந்தமாக வைத்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்டது. நாஜி தலைமையகத்தின் உத்தரவுக்கு இணங்க, மிக வேகமாகவும், செலவில்லாமலும் ஆயிரக்கணக்கான மக்களை சவக்குழிக்கு அனுப்பிய அவனிடம், நீதிமன்றம் “கருத்து” கேட்டுக் கொண்டிருந்தது.
அவனது ஒப்புதல்களில் ஒன்று மிகக்கொடூரமானது. விஷவாயு வாகனத்தில் ஏற்றப்பட்ட கைதிகளில் பலர் மூச்சுத்திணறலில் ஒருவர் மற்றவரை பிய்த்துக்கொண்டு இறந்தனர். அவர்களை மொத்தம் சேர்க்க முடியாத அளவுக்கு அவர்களுடைய உடல்கள் ஆடைகள் இல்லாமல் கிடந்தன என்கிறான். இருந்தாலும், இதுபோன்ற கொலைகளுக்காக விஷவாயு வாகனங்களை ஏராளமாக சப்ளை செய்ததாக ஒப்புக்கொள்கிறான். அந்த வாகனங்களால் ஐரோப்பா முழுவதும் குறைந்த செலவில் ஆண்கள், பெண்கள், குழந்கைளை லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். ரவுச் தனது வயதாலும், படிப்பாலும் மிகவும் முதிர்ச்சி அடைந்தவராக இருந்தார். அத்தகைய நபரை இரண்டு மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என்று சிலி நீதிமன்றம் விடுதலை செய்தது.
நீதிபதிகளைப் பொறுத்தவரை, இந்த வழக்கு சிலியின் சட்ட வரம்புக்குள் விசாரிக்க தகுதியானது அல்ல என்று கூறினார்கள். இத்தனைக்கும் ரவுச் சிலி நாட்டின் தொழில் அதிபராக சிலியின் தெற்குப்பகுதியில் உள்ள பணக்கார கிளப்புகளில் தொடர்ந்து பங்கேற்றவர். ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமானவன் ரவுச் என்ற உண்மை தெரியாமலேயே அவனுடன் கைகுலுக்கி காலம் கழித்திருக்கிறார்கள் என்ற உண்மையை நீதிமன்றம் தவிர்த்துவிட்டது. தற்போது அவர்களுக்கு உண்மைகள் தெரியவந்த நிலையில், சிலி நாட்டின் நீதிமன்றம், ரவுச்சை விடுவித்தது. அவனது பாவங்கள், உயர் சமூகத்தால் மன்னிக்கப்பட்டன.
குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த வலேன்சுவேலா சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில், கொலைகாரன் ஹெர்மன் ரவுச் சுதந்திரமாக நடமாடினான். எங்களில் பலரும், ஆண்டார்டிகா கண்டத்திற்கு அருகே அடைந்துள்ள இந்த தேசத்தின் குடிமக்கள் பலரும், ஒரு உண்மையான பயங்கரத்தை அனுபவித்தோம்.
ஒரு நாகரிகமற்ற, அறியாமையில் மூழ்கியிருந்த தொழிலாளி, அநீதியின் கொடுங்கரங்களால் அமிழ்த்தப்பட்ட ஒரு அப்பாவி தனது கோப உணர்வால் ஒரு குற்றத்தைச் செய்ய தூண்டப்பட்டான். அதற்கான விலையைக் கொடுத்தான்.
அறிவியல் பட்டம் பெற்ற ஹிட்லரின் தளபதிகளில் ஒருவராக இருந்து, தனது மிகச்சிறந்த அறிவையும், கண்டுபிடிக்கும் திறமையையும், பல்லாண்டு காலமாக, மக்களைச் கொன்று குவிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கச் செலவிட்டான், தனது கண்டுபிடிப்பைக் கொண்டு இந்த உலகம் முன்னெப்போதும் கண்டிராத கொடுங் குற்றங்களைச் செய்தான். அவன், விடுதலை செய்யப்பட்டு இவ்வுலகில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகிறான். தான் செய்த கொடுமைகளை நீதிமன்றத்தில் தைரியமாக விளக்கவும் அவனால் முடிகிறது.
இந்த இரண்டு தீர்ப்புகளை அளித்த நீதிபதிகளைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள், தங்களது மனைவிமார்களையும், குழந்தைகளையும் எந்தக் கண்களால் பார்ப்பார்கள்?! இத்தகைய அதிர்ச்சியான முடிவுகளை வெளியிட்ட தங்களது தந்தைகளைப் பற்றி அவர்களின் மகன்களும், மகள்களும் என்ன நினைப்பார்கள்?
இந்த நீதிமான்களின் பார்வையில் எது தீமை? எது நன்மை?
ரவுச்சால் கண்டுபிடிக்கப்பட்ட “கொலைகாரப் பேருந்துகளில்” ஒருவரையொருவர் குத்திக் கிழித்துக் கொண்டு செத்துப்போன மக்களைக் காலம் எப்படி நினைவில் வைத்துக்கொள்ளும்?
தலைநகரில் இருந்து, கலோனல் ரவுச்சை பேட்டிகாண ஒரு பத்திரிகையாளர் குழு வந்தது. அவன் தனது வியாபார நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது குறித்து மிகவும் சந்தோசமாக இருப்பதாகச் சொன்னான். “மிகச் சிறந்த சட்டங்களுடன் கூடிய மிகச்சிறந்த நாடு” என்று அவன் பத்திரிகையாளர்களிடம் கூறினான்.
நகுஎல்டோரா கிராமத்தின் விவசாயத் தொழிலாளி கொல்லப்படப்போகும் சில்லான் சிறைக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் சென்றனர். அது ஒரு அந்திப்பொழுது. உயரமான மலைகளில் இருந்து பனி வழிந்து கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள், அந்த மனிதனை, அவனது சிறை அறையில் கண்டார்கள்.
“நீங்கள், எங்களிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். சாகப்போகிற ஒரு மனிதனின் கடைசிப்பேட்டி என்று பரபரப்பாக வெளியிடுவதற்காகவே அவர்கள் கேட்டார்கள்.
“எனது காலணிகளைப் பாருங்கள். அவை புதியவை. எனது முதல் காலணிகள் இவை. இதற்கு முன்னால் நான் செருப்பு அணிந்ததே இல்லை. இந்த சிறையில் அவர்கள் என்னை அன்பாக நடத்தினார்கள், இன்றைக்குத்தான் ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுங்கள் என்று அவர்களிடம் கேட்டிருந்தேன். நான், இந்த செருப்புகளை பார்த்துக் கொண்டே சாவேன்” என்றான் அவன்.
- ஏபிஎன் இண்டர்ரேசனல்
நியூஸ் புல்லட்டின்,
ஜூலை 2, 1963
முந்தைய பகுதி:
கியூபாவின் உண்மையான கதாநாயகன்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா 16
அடுத்த பகுதி:
கியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18