Skip to main content

'மாயி' படத்துல அந்த ஸீனு சரி சலம்பலா இருக்கும்... வாமா மின்னல் கதை சொல்லும் வடிவேலு! - இம்மை அரசன் டாக்ஸ் #4

Published on 15/10/2019 | Edited on 23/10/2019

'வடிவேலு' தமிழ் சினிமா தந்த சிரிப்பு மருத்துவர். ஆம், சிரித்தால் நோய் தீர்ந்து போகுமென்றால் அந்த சிரிப்புக்கு காரணமானவர்களை எப்படி அழைப்பது? இந்த பெயரை விட்டுவிட்டு. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமைவை தன்னுடைய தனித்துவமான உடல்மொழியால் வசீகரித்து வருகிறவர். அவருடைய இந்த சிரிப்பு பயணத்தில் அவர் கடந்து வந்த பாதைகளை நம்முடைய இதழில் தொடராக எழுதி வந்தார். அதில் ஒரு பகுதி வருமாறு,

"மாயி' படத்துல அந்த ஸீனு சரி சலம்பலா இருக்கும். டைரக்டர் பாண்டியன் இந்த ஸீன சொன்னதுமே... ஊர்ல நான் பார்த்த அலம்பலயெல்லாம் நெனச்சுப் பாத்துக்கிட்டேன். நிமிஷத்துல கடய தொவம்சம் பண்ணுன நாய்களோட ரகளயும் கண்ணுக்குள்ள வந்து போச்சு. அதுல இருந்து சில பீஸுகள கோர்த்து மெருகேத்திட்டு... ‘"இப்புடி பண்ணலாமா?'னு டைரக்டர்கிட்ட கேட்டு ஓகே வாங்கிட்டு வந்து நின்னேன்.

என்னயப் பொருத்தவர தினசரி ஷூட்டிங் ஸ்பாட்ல நான் கும்புடுறது கேமரா லென்ஸத்தான். அது ஒரு லென்ஸுதானனு நெனைக்கலாம். ஆனா... அந்த ஒத்த லென்ஸுதான் கோடி கண்கள். அதுதான என்னய படம் புடிச்சு தெரயில காட்டுது. மக்கள் பாக்குறாங்க. கும்புட்டுட்டு ஆரம்பிச்சா எதுக்க கேமரா இருக்கது மறந்து போயிறுவேன். சால்னா கடக்குள்ள தள்ளாடிக்கிட்டே உள்ள வருவேன். கெழவி ஏவாரம் பாத்துக் கிட்டு இருக்கும். அதுக்கு தொனையா பேத்திக இருக்கும். 

ghj

‘இன்னொருத்தன் நக்கிக்கிட்டிருக்க ஊறுகாய நானும் தொட்டு நக்குவேன்."வக்கில்லாத பயக வந்துட்டாய்ங்க'னு ஒருத்தன் திட்டுவான். குடுச்சவனுக்கு சல்லுன்னு கோவம் வருமே! ‘"ஏலே... வாடா... வாடா... வாடா... ஓம்பணத்துக்கும் ஏம் பணத்துக்கும் ஜோடிபோட்டுக்குவமா ஜோடி'னு ரகள கள கட்டும். கடயில இருக்க சுண்டலு, அவிச்ச முட்டயெல்லாம் பறக்கும். ஊர்ல மொறப்புள்ளைககிட்ட வம்பு பண்ற மேட்டரெல்லாம் அதுல வச்சாச்சு."ஏத்தா மாமனுக்கு எப்ப கறிக்கஞ்சி ஊத்தப் போற?'னு அந்தப் புள்ளய கையப்புடுச்சு இழுத்து கேப்பேன். ‘"எங்கக்கா வருது. அது ஊத்தும் கஞ்சி'னு அந்தப் புள்ள சொல்லும். "நொக்கா வேற இருக்காளா நொக்கா'னு சொல்லிக்கிட்டே பாத்தா கோவை சரளா வருவாங்க.


இப்படித்தேங்... ஃபுல் மப்ல நடக்கக்கூட முடியாம கட ஓரத்துலயே படுத்துருவாய்ங்க. சில பேரு. காலைல நாய்வந்து மூஞ்சிய நாலு நக்கு நக்குனப்புறம்தான் முழுச்சுப்பாத்துட்டு வீடு போய் சேருவாய்ங்க. இல்லேன்னா பொண்டாட்டி வந்து நாலு சாத்து சாத்தும்.  டேக் ஓக்கேவாகி வந்தா... என்னியவே சுத்திச் சுத்தி வாராரு ஒரு பப்புளிக்கு. 
நானும் எம்புட்டு நேரத்துக்குத்தான் பொறுக்குறது?

"என்னா விசயம்?'

"எது என்னா விசயம்?'

"எதுக்குய்யா சுத்தி வார?'

"ஒரு டவுட்டு கிளியர் பண்ணணும்...'

"என்னா டவுட்டு?'

"அப்புடியே குடுச்சுப்புட்டு நான் பண்ற மாதிரியே பண்றியே. அதான்... நீயும் குடிச்சிட்டு நடிக்கிறியோ?'னு டவுட்டு.'

"அதெல்லாம் இல்லய்யா'னு போலீஸ்காரவுக கிட்ட வாய ஊதிக் காமிக்கிறது
மாதிரி ஊத வேண்டியதாப் போச்சு.

 

vgh



தெருவுக்கு நாலு வடிவேலாவது நாட்ல இருக்காங்க. வெட்டி அலம்பல் பண்ணிக்கிட்டு, நக்கலும், நையாண்டியுமா திரிவாக. அதனாலதான் அவங்க சினிமாவுல என்னய பாக்கும் போது தங்களவே பாக்குற மாதிரி பாத்து ரசிக்குறாங்க. தலைவர் எம்.ஜி.ஆர். தன்னோட படங்கள்ல நெறைய்ய தத்துவ பாட்டு பாடுவாரு.மக்கள்ட்ட இருக்க மோசமான குணாதிசயங்கள பாட்டுல எடுத்துச் சொல்லியே மக்கள்ட்ட பேரு வாங்குவாரு.தலைவர் எம்.ஜி.ஆர். வழிதான் நம்ம வழியும். மக்கள்ட்ட இருந்தே விஷயங்கள எடுத்து அத மக்கள்ட்டயே குடுக்கிறேன்.

"வடிவேலு... நீ ஒருத்தந்தான் மதுர மக்களோட வெள்ளந்தியான பேச்சயும், அவங்களோட பாடிலாங்வேஜயும் தத்துரூபமா திரயில கொண்டுக்கிட்டு வர்றே'னு இளையராஜா அண்ணன் சொல்லுவாரு. மதுரயில இருக்கும்போது சுத்தியிருக்க கிராமங்களுக்கும் போயி ரவுண்டடுச்சிட்டு வருவம். அப்ப பாக்குற சங்கதிகள அப்புடியே மெருகேத்தி மெருகேத்தி சொல்லுவேன். பிரெண்டுகள்லாம் சிரிப்பாய்ங்க. வீட்டுக்குப்போயி ஆக்ஷனோட எங்கம்மா கிட்டயும் சொல்லுவேன். சிரி சிரின்னு  சிரிக்கும் எங்கம்மா. ஒரு கிராமத்துல பொருள காணாம்ண்டு மரத்தடி பஞ்சாயத்து தாக்கீது ஆகுது. பஞ்சாயத்து பெருசு கேக்குது.... "ஒனக்கு ஆருமேலயாவது சந்தேகமா இருக்காப்பா?' பிராது குடுத்தவரு அப்புடியே ஒரு ஆள பாக்குறாரு.

அந்த ஆளு மீசய தடவிக்கிட்டு வெறப்பா... ‘"சொல்றா... சரியான ஆம்பளதான... சொல்லு. தயிரியமிருக்குல்ல... சொல்லு. அட... தயிரியமிருந்தா சொல்றா'னு டபுள் மீனிங்லயே பேசுறாரு. அதாவது "தயிரியமா சொல்லு'ங்கிற மாதிரியும் இருக்கும். "தயிரியமிருந்தா என்னய காட்டிக்குடு பாப்பம்'ங்கிற மாதிரியும் இருக்கும். இப்புடியே போய்கிட்டிருந்துச்சு பஞ்சாயத்து. களவாண்டவன் போட்ட போடுல... ‘"பொருளு போனா போகுது. என்னய ஆளவிடுங்க சாமி'ன்னுட்டு கௌம்பீட்டாரு.
 

jk



இதேபோல, எங்க தெருவுல நடக்குற ஒரு ஸீனயும் காமெடி பீஸாக்குனேன். அது என்னாங்குறீகளா? ஒருத்தனப் போட்டு நாலஞ்சு பேரு அடி பிரிச்சு மேஞ்சுக்கிட்டிருப்பாய்ங்க. தெருச்சனம், போறசனம், வாறசனம்னு வேடிக்க பாக்க கூட்டம் கூடிப் போகும். அடிதடி முடிஞ்சதும் அடிபட்டவன் என்னா பண்ணுவான்னா... கைல இருக்கும் துண்ட சுத்திக்கிட்டே... ‘"ப்போலாம் போலாம் என்னா வேடிக்க... ஏத்தா வெரசா போயி வீட்ல ஒல வையி. இங்ஙன நின்னு பெராக்கு பாத்துக்கிட்டுருக்க. ஏய்ய்.. போ... போ... கூட்டம் போடாத. டேய் மாப்ள... அதான் அடுச்சுட்டேல... இன்னமும் என்னா நிக்கிற... கௌம்புய்யா'னு கூட்டத்த வெலக்கிவிடுவான். அடிபட்டவனே கூட்டத்த வெலக்கி விடுறதப் பாத்துப்புட்டு வேடிக்க பாத்தவுக கொழம்பிப் போயிருவாக.

"கண்ணாத்தாள்' படத்துல டைரக்டர் பாரதிகண்ணன் ‘ஆடு திருடு போன ஒரு பஞ்சாயத்து ஸீன சொன்னாரு. திருடுனவனே திருட்டு குடுத்தவன மெரட்றதயும், கூடுன கூட்டத்த அவனே கலைக்கிறதியும் சொன்னேன். "நல்லாருக்கு. இதயும் சேத்துப் பண்ணுங்க'ன்னு சொன்னாரு. அதுதான் அந்த சூனாபானா காமெடி. பஞ்சாயத்து கூடி கலஞ்சதும் "ஏ..சூனாபானா அப்புடியே மெயிண்ட்டன் பண்ணு'னு சொல்லீருப்பேன். "நீங்க கொடுத்து வச்சவரு. காமெடியா சிரிக்க சிரிக்க இருக்கீங்க. ஒங்களுக்கெல்லாம் கஷ்டமே வராதுல்ல'னு சில பேர் கேப்பாங்க. திர வேற... தர வேற. எனக்கும் தனிப்பட்ட கஷ்டநஷ்டம், கவலை, கண்ணீரும் இருக்கு.

சினிமாவுல எப்படியாவது பெரிய ஆளாகிரணும். இனிமே நமக்கு அதுதேன் தொழில்னு வந்துட்டேன். படங்கள்ல நடிச்சுக்கிட்டிருந்தாலும் பெருசா வருமானம் கெடயாது. ஆனாலும் நம்பிக்க. ஆனா... "எப்பா நீ நெனைக்கிற மாதிரி சினிமாவ மட்டுமே நம்பி பொழைக்கிறது லேசுப்பட்ட காரியங் கெடயாது'னு சினிமா நண்பர்கள் சொல்றாங்க. ‘"என்னாடா வடிவேலு இப்புடி கௌப்புறாங்க பீதிய'னு எனக்குள்ள கொழப்பம். இருந்தாலும் "விடுறா வடிவேலு போராடி பாத்துருவம்'னு வீராப்பு. "டப்பிங் பேசி சம்பாதிக்கலாம், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா போயிரலாம்'னு தேத்திக்கிட்டேன்.

"மொதல்ல ஒரு பழய கார வாங்கிப் புடணும். அப்புறமா ஒரு வீட்ட வாடகைக்கி புடுச்சுறணும். அதுக்குப் பின்னாடி குடும்பத்த கூட்டியாந்துரணும்'னு போராடினேன். அதுபோலவே அமைஞ்சது. இப்படி பத்தியும் பத்தாமயும் போயிக்கிட்டிருந்த நேரத்துலதான்... கமல் சார் குடுத்த ஷாக்குல கண்ணு கலங்கிப் போச்சுல்ல.

அடுத்த பகுதி - 5