கேரளாவை பதைபதைக்க வைத்த கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை கைதியான ஜெயானந்தன் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
கேரளாவைச் சேர்ந்த ஜே.பி ஜெயானந்தன், பல வீட்டில் கொள்ளை, கொலைகளை செய்தது எப்படி எனத் தூக்கு தண்டனை கைதி கொடுத்த பரபரப்பு கொடுத்த வாக்குமூலமும், அவரது மகளான வழக்கறிஞர் கீர்த்தி போட்ட பெட்டிசன்படி சிறையை விட்டு வெளியே வந்து மகளின் திருமணத்தில் கலந்துகொள்கிறார். மேலும், ஜே.பி.ஜெயானந்தனுக்கு பரோல் கொடுத்த நீதிபதி மீது கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
நமது சட்டப்புத்தகத்தில், காவல்துறை இருக்கும் இடத்தில் கொடுக்கக்கூடிய எந்த வாக்குமூலங்களும் செல்லுபடியாகாது என்று கூறுகிறது. காவல்துறையை பொறுத்தவரை, சரியான குற்றவாளிகளை கண்டிபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவது தான் முதல் கடமை. சரியான குற்றவாளி தானா என்பதை சாட்சியங்களை வைத்து தீர்ப்பு சொல்வது நீதிபதியினுடைய கடமை. இந்த சட்டத்திற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் தான் இருக்கிறது. அது என்னவென்றால், குற்றத்தை செய்தவர், அந்த குற்றத்தோடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை கண்டிப்பிடித்து கைப்பற்றினால் அதை தொடர்ந்து அவர் தரக்கூடிய வாக்குமூலம் செல்லுப்படியாகும். ஆனால், குற்றவாளியை பிடித்துவிட்டோம் என்ற மிதப்பில் சரியான ஆதாரங்களை காவல்துறை சில நேரங்களில் வைத்திருப்பதில்லை. 39 ஏ எனும் நேஷனல் லா ஸ்கூலில் உள்ள வாலிண்டீர் அமைப்பு, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தூக்கு தண்டனை கைதிகளின் மனித உரிமைகள், அவர்களுக்கு எதிரான வழக்குகளில் இருக்கக்கூடிய ஓட்டை உடைசல்களை எல்லாம் கண்டுபிடித்து அவர்களுக்கு விடுதலை பெற்றோ அல்லது தண்டனையை குறைப்பதற்கான வேலையை செய்வார்கள். அது போல், ஜெயானந்தன் வழக்கையும் இந்த 39 ஏ அமைப்பும், தனியார் நீயூஸ் சேனலும் சேர்ந்து கையில் எடுத்து விசாரிக்கிறது.
கொலை செய்யப்பட்டவர்களை, ஜெயானந்தன் தான் கொலை செய்தான் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? எனப் போலீசிடம் விசாரிக்கிறது. கொலை செய்த போது ஜெயானந்தனை பார்த்ததற்கு ஆதாரமாக ஒரு பெண் இருக்கிறார் என போலீஸ் சொல்ல, ராத்திரி நேரத்தில் ஜெயானந்தன் தான் என்பதை அந்த பெண் எப்படி உறுதிசெய்தார் என 39 ஏ அமைப்பு குறுக்கு விசாரணை செய்கிறது. குற்றம் நடந்த இடத்தில் எந்தவிதமான கைரேகையும் கைப்பற்றவில்லை, மோப்ப நாயையும் கூட்டி வந்து ஆதாரங்களை கைப்பற்றவில்லை கேள்வி மேல் கேள்வி கேட்கிறது 39 ஏ அமைப்பு. இப்படியாக ஜெயானந்தன் கொலை செய்ததாக காவல்துறை வைத்திருந்த சாட்சியங்கள், ஆதாரங்களை எல்லாம் 39 ஏ அமைப்பு உடைக்கிறது. அதனால், பொய்யான வழக்குகளை எல்லாம் ஜெயானந்தன் மேல் போட்டு பொய்யாக ஒரு வழக்கை ஜோடிக்கப்பட்டிருக்கிறது என போலீஸ் மேல் அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இதற்கிடையே, ஜெயானந்தன் எந்தெந்த தேதிகளில் எல்லாம் கொலை செய்தார் என காவல்துறை சொல்கிறதோ அந்ததேதிகளில் எனது கணவன் என்னோடு தான் இருந்தார் என ஜெயானந்தனின் மனைவி சொல்கிறார். மேலும், தன்னுடைய தந்தை பல விஷயங்களில் சொல்லப்படாமல் போய் விட்டன. பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வராமலே போய்விட்டன. அந்த உண்மைகளை எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால் மறுவிசாரணை நடத்த என ட்ரைல் கோர்ட்டில் ஜெயானந்தனின் மகள் வழக்கறிஞர் கீர்த்தி வழக்கு தொடர்ந்தார். ஜெயானந்தனுக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்கிறார்கள். அந்த ஆயுள் தண்டனை எத்தனை காலம் என சொல்ல வேண்டும் என கீர்த்தி கேட்க, தண்டனை கொடுக்கப்பட்டதில் இருந்து 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இன்னமும், இந்த வழக்கு நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. விசாரணையின் முடிவில் என்ன மாதிரியாகவும் ஆகலாம்.
ஜெயானந்தன் சிறையில் இருந்துகொண்டே ‘புலரி விடியும் முன்பே’ என்ற நாவலை எழுதுகிறார். தூக்கு தண்டனைக்கு ஆளான சிதம்பரம் என்ற கதாபாத்திரம், தூக்கு மேடைக்கு காத்திருக்கும் போது தன்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது என்ன என்ன நடக்கிறது என்பதை பற்றி அந்த நாவலை எழுதுகிறார். வெளியிட்ட அன்றே, அந்த புத்தகத்தின் விற்பனை தாறுமாறாகப் போனது. புத்தகம் வெளியிடும் போதும், தன்னுடைய திருமணத்தின் போது தந்தையை வெளியே கொண்டு வருகிறார் அவரது மகள் வழக்கறிஞர் கீர்த்தி. 9ஆம் வகுப்பு வரை படித்த ஜெயானந்தன், சிறையில் இருக்கும் நூலகத்தில் படித்துக்கொண்டே இப்போது ஒரு எழுத்தாளாராக மாறியிருக்கிறார். இன்னமும், 2 நாவல்களையும், ஒரு கட்டுரையும் எழுதி அதை வெளியிடுவதற்கான வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.