கேரளாவை பதைபதைக்க வைத்த கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை கைதியான ஜெயானந்தன் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அன்று கே.பி ஜெயானந்தன் எழுதிய ‘புலரி விடியும் முன்பே’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நீதிபதி நாராயண குருப் என்பவர் வெளியிட்ட அந்த புத்தகத்தை காவல்துறையைச் சேர்ந்த கே.பி வேணுகோபால் வாங்கிக்கொள்கிறார். அந்த புத்தகத்தை எழுதிய கே.பி ஜெயானந்தனை கேரளாவில் ‘ரிப்பர் ஜெயானந்தன்’ என்று தான் அழைப்பார்கள். ரிப்பர் என்றால் கத்தியால் குத்தி கிழித்து உயிர்களை எடுப்பவர் என்று அர்த்தம்.
இவர், 7 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இந்த வழக்குகளை நடத்தி 3 வழக்குகளில் இவர் விடுதலையாகியிருக்கிறார். 2 வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கிறார்கள். தூக்கு தண்டனை கைதியாக திருவனந்தபுரம் சென்ரல் ஜெயிலில் இருந்த இவரும், இவரோடு தங்கியிருந்த இன்னொருவரும் அந்த ஜெயிலில் இருந்து தப்பித்துவிடுகிறார்கள். பாதுகாப்பு மிகுந்த அந்த ஜெயிலில் இருந்து தப்பித்த செய்தி கேரளா முழுவதும் பரவி பேசுபொருளாக மாறுகிறது. அவர்களைத் தீவிரமாக தேடி வந்த போலீசார், இரண்டு மாதங்கள் கழித்து பிடிக்கிறார்கள். அதன் பிறகு ஜெயானந்தனை பாதுகாப்பு மிகுந்த வியூர் ஜெயிலில் வைக்கிறார்கள். அங்கும் அவர் தப்பிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. அதற்கு பின்னாடி, கண்ணூர் ஜெயிலில் வைக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்தும் தப்பித்து விடுகிறார். மீண்டும் அவரை போலீஸ் பிடிக்கிறது.
அவரை பிடித்து விசாரித்ததில், தேவகி என்ற பெண்ணும் அவருடைய கணவரான பாலகிருஷ்ணன் தங்களுடன் வீட்டில் ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது ஜெயானந்தன் வீட்டுக்குள் வந்து இரும்பு கம்பியைக் கொண்டு தேவகியின் தலையில் அடித்து கொலை செய்கிறார். தேவகி போட்டிருந்த நகையெல்லாம் எடுத்த பின்பு, வளையலை எடுக்க முடியாததால் தேவகியின் கையை வெட்டி வளையலை எடுக்கிறார். மேலும், அங்கிருந்த பணத்தையெல்லாம் எடுத்துவிட்டு பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த பாலகிருஷ்ணனனையும் கம்பியால் அடித்ததில் அவர் மயக்கமடைகிறார். அவர் இறந்துவிட்டதாக என நினைத்து ஜெயானந்தன் மற்றதையெல்லாம் எடுத்து அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலை வைத்து ஜெயானந்தனை கைது செய்கிறார்கள். அவரிடம் விசாரிக்கும்போது மற்ற கொலைகளைப் பற்றி சொல்கிறார்.
இவருக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மீன்பிடி தொழிலை செய்து வந்த ஜெயானந்தனுக்கு போதுமான வருமானம் வரவில்லை. இதனால், வயதான முதியவர்களை தாக்கினால் சுலபமாக பணம் கிடைக்கும் என நினைத்து கடந்த 2003ஆம் ஆண்டு ஜோஷ் என்ற வீட்டுக்கு புகுந்து அவரை கம்பியால் அடித்து கொலை செய்கிறார். அதன் பிறகு, அங்கிருந்த ரூ.17,000 பணம் மற்றும் பொருளை எடுத்து விற்று பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்துவிடுகிறார். இந்த குற்றச்செயலில் மாட்டிக்கொள்ளாததால், அடுத்ததாக கடந்த 2004ஆம் ஆண்டில் நஃபீஷா என்ற 51 வயது பெண்மணி வீட்டுக்கு சென்று, நஃபீஷாவையும் அந்த பெண்ணின் மருமகள் பெளஃஷியா என்ற பெண்ணையும் கம்பியால் அடித்துக் கொலை செய்கிறார். அதன் பிறகு, நூர்ஜகான் என்ற பெண்ணையும் கொலை செய்துவிட்டு அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு வீட்டில் உள்ள எல்லாவற்றையும் எடுத்துவிட்டுச் செல்கிறார்.
அதே வருடத்தில், கல்புரக்கில் சகாதேவன் என்ற 64 வயது பெரியவரையும், அவரது மனைவி நிர்மலா என்ற 52 பெண்ணையும் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து 11 பவுன் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். அடுத்ததாக, அரவிந்தாக்ஷன் பணிக்கர் என்பவரையும் அவரது மனைவி ஓமனா என்பவரையும் அதே முறையில் கொலை செய்துவிட்டு 18 பவுன் நகையைக் கொள்ளையடித்து தப்பித்து விடுகிறார். இது முடிந்து அடுத்ததாக, கேரளா பீவரேஜஸ் கார்பரேஷன் என்ற இடத்திற்கு கொள்ளையடிப்பதற்காகச் சென்று காவலுக்கு இருக்கக்கூடிய சுபாஷ் கான் என்பவரைக் கொலை செய்துவிடுகிறார். அடுத்ததாக, வடக்கேகரா என்ற இடத்தில் வசிக்கும் ஏலிக்குட்டி என்ற 84 வயது பெண்மணியை கொலை செய்துவிடுகிறார். எந்த குற்றத்தையும் ஜெயானந்தன் செய்யும் போதும் கைரேகை பதியாதபடி தடயமே இல்லாமல் மற்றவர்களுக்கு சந்தேகம் வராதபடி தான் கொலை செய்கிறார். இதையெல்லாம் வாக்குமூலமாக ஜெயானந்தன் கொடுக்கிறார். இதையெல்லாம் சேர்த்து தான் இவர் மீது வழக்குகள் போட்டு திருவனந்தபுரம் ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அதன் பிறகு, வியூர் ஜெயில், கண்ணூர் ஜெயில் எனச் சிறையில் அடைக்கப்பட்டு தப்பித்தும், தப்பிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
அதன் பிறகு, திருச்சூர் பிரின்சிபள் செஷன் நீதிபதி, தேவகி மற்றும் ஏலிக்குட்டி வழக்கில் ஜெயானந்தனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கிறார். மற்ற வழக்குகளில் அவர் மீது முழுமையான ஆதாரம் இல்லை எனக் கூறி விடுவிக்கிறார். மற்ற இரண்டு வழக்குகளில் அவருக்கு தண்டனை கொடுத்ததால் அவர் சிறையில் தான் இருக்கிறார். 17 வருடங்களாக நடந்துக் கொண்டிருந்த வழக்கின் இடைப்பட்ட காலத்தில் ஜெயானந்தனின் மூத்த மகள் கீர்த்தி வழக்கறிஞராகி ஒரு போலீஸ் ஆபிஸரின் மகனை திருமணம் செய்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற திருமணத்திற்கு தன்னுடைய அப்பா வர வேண்டும் என கீர்த்தி பெட்டிசன் போடுகிறார். அந்த வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்று வாதாடி, ஜெயானந்தனுக்கு 2 நாள் போலீஸ் பாதுகாப்புடன் பரோல் கொடுக்கப்படுகிறது. அதன்படி, வெளியே வந்து திருமணத்தில் கலந்துகொள்கிறார். மனித நேய அடிப்படையின்படி, ஜெயானந்தனுக்கு பரோல் கொடுத்த நீதிபதி மீது கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.