
1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கொரியா யுத்தம் முடிவுக்கு வந்தது. இருதரப்பினரும் போரை முடிவுக்கு கொண்டுவர சம்மதித்து வடகொரியா எல்லை அருகே உள்ள பான்முன்ஜோம் என்ற இடத்தில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இந்த உடன்படிக்கையின்படி 250 கிலோமீட்டர் குறுக்களவுள்ள எல்லைக் கோடுக்கு இருபுறமும் தலா 4 கிலோ மீட்டர் அகலத்துக்கு பொதுவான இடம் ஒதுக்கப்பட்டது. ராணுவ ரோந்து இல்லாத இந்த பகுதியில் மக்கள் சந்திப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த உடன்படிக்கைக்கு பின்னர், எல்லைப் பகுதியில் நடந்த அத்துமீறல்களில் தென்கொரியா வீரர்கள் 500 பேரும், அமெரிக்க வீரர்கள் 50 பேரும், வடகொரியா வீரர்கள் 250 பேரும் 1953 முதல் 1999 ஆம் ஆண்டுக்கு இடையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு கொரியாக்களின் எல்லைப் பகுதியில் ராணுவ ரோந்து இல்லாத பகுதியில் டாயே சங் டோங், கிஜோங் டோங் என்ற இரண்டு குடியிருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இரண்டு குடியிருப்புகளும் 1950 ஆம் ஆண்டு கொரியா யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே இருந்தவை. அந்தக் கிராத்தவரின் வாரிசுகள் இந்தக் கிராமங்களில் ஆண்டுக்கு 240 இரவுகள் தங்கி தங்கள் குடியிருப்பை பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தென்கொரியா எல்லைப் பகுதியில் உள்ளது டாயே சங் டோங் கிராமம். தென்கொரியா குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கிராமத்தவர்கள் யாரும் தென்கொரியா அரசுக்கு வரி செலுத்தவோ, ராணுவ சேவைகளைப் பெறவோ விலக்குப் பெற்றுள்ளனர். அதேசமயம், வடகொரியா எல்லைப் பக்கம் இருக்கிற கிஜோங் டோங் கிராமத்தில் ஏராளமான வண்ணமயமான பல அடுக்கு மாடி கட்டடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் இடம்பெற்றுள்ளன.

எல்லையின் இருபுறமும் கூட்டுப் பாதுகாப்புப் படை ஆலோசனைக் கூடங்களை இரு கொரியா அரசுகளும் கட்டியுள்ளன. கொரியா யுத்தத்தில் பங்கேற்ற நாடுகள் மற்றும் கூட்டுப்பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கட்டடங்களில்தான் ஆலோசனை நடத்த வேண்டும். இரண்டு கொரியா அரசுகளும் தங்கள் பாரம்பரிய கட்டிட வடிவமைப்பிலேயே இந்தக் கட்டடங்களை கட்டியுள்ளன.
எல்லையோரத்திலேயே இரு நாடுகளும் தங்களுடைய பலத்தை வெளிப்படுத்தும் வகையிலும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையிலும் செயல்படுவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. 1980களில் தென் கொரியா அரசு தனது நாட்டுக் கொடியை டாயே சங் டோங் கிராமத்தில் பறக்கவிட்டது. 130 கிலோ எடையுள்ள கொடியை 323 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை கட்டி பறக்கவிட்டது. இதையடுத்து, வடகொரியா தனது எல்லையில் உள்ள கிஜோங் டோங் கிராமத்தில் 525 அடி உயரத்தில் மாபெரும் கொடிக் கம்பத்தை எழுப்பி, 270 கிலோ எடையுள்ள வடகொரியா கொடியை பறக்கவிட்டது. வடகொரியாவின் கொடிக்கம்பம் உலகின் நான்காவது உயரமான கொடிக்கம்பம் என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபிய தலைநகர் ஜெடாவில் 558 அடியிலும், தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் 541 அடியிலும், அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் 531 அடியிலும் கொடி கம்பங்கள் இருக்கின்றன.
இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் பல சமயங்களில் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதை, போர்நிறுத்த உடன்பாடுக்கு பிறகு இரண்டு கொரியாக்களும் மீண்டெழுந்த கதையோடு சேர்த்தே பார்க்கலாம்.
போர்நிறுத்த உடன்பாடுக்கு பிறகான முதல் 10 ஆண்டுகள் தென்கொரியா கடுமையாக திணறியது. அமெரிக்கா ஆதரவு இருந்தாலும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.

கொரியா போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட இரண்டே மாதங்களில் தென்கொரியா அரசுடன் அமெரிக்கா அரசு இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி, இருநாடுகளும் தங்கள் மீது வெளியார் தாக்குதல் நடத்தும் சமயத்தில் ராணுவ ஒத்துழைப்பு அளிக்க வகைசெய்யப்பட்டது. தென்கொரியாவில் நிரந்தரமாக அமெரிக்கா ராணுவப் பிரிவை நிறுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கொரியா போர் நிறுத்த உடன்பாடுக்குப் பிறகு அமெரிக்கா ஆதரவுடன் ஜனாதிபதி சிங்மேன் ரீயின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. பாலியல் தொழில் தென்கொரியாவின் 25 சதவீத கொரியர்களின் வருமானம் ஆகியது. அவர்கள் பெரும்பாலும் அமெரிக்க ராணுவத்தினருக்கு சேவை புரிந்தனர்.
சிங்மேன் ரீ தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும்வகையில் அரசியல் சட்டத்தை திருத்திக் கொண்டார். அமெரிக்காவும் தனது நிதியுதவியை கடுமையாக குறைத்துவிட்டது. பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ரீ, 1958 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேச பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர். இந்நிலையில்தான் தனக்கான நாடாளுமன்றத்தை தேர்வு செய்ய 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த ரீ முடிவெடுத்தார். முன்னேற்றக் கட்சி சார்பில் சோ போங் ஆம் போட்டியிட தயாராய் இருந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் சோ பியாங் ஓக் களத்திற்கு தயாராக இருந்தார். இவர்களில் 1956 தேர்தலிலேயே 10 லட்சம் வாக்குகளை பெற்ற சோ போங் ஆம், சிங்மேன் ரீக்கு சவாலான போட்டியாக கருதப்பட்டார். அவர் வெற்றிபெற்றால் தனது பதவிக்கு ஆபத்து என்று கருதினார். உடனே, அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றம்சாட்டி கைதுசெய்து உடனடியாக தூக்கிலிட்டார். சோ பியாங் ஓக் வயிற்றில் ஒரு அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ரீயின் இரண்டு முக்கிய எதிரிகளின் மரணம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே தனது அடுத்த வாரிசாக அதாவது துணை ஜனாதிபதியாக லீ கி பூங் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சாங் மியான் என்பவர் எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், நம்பவே முடியாத அளவுக்கு நம்பவே முடியாத அளவுக்கு மிகக் குறைவான வாக்குகளை சாங் மியான் பெற்று தோல்வியடைந்தார். தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக சாமானிய மக்களே சந்தேகம் கொண்டனர்.
முன்னரே முத்திரையிடப்பட்ட வாக்குச் சீட்டுகளால் வாக்குப்பெட்டிகளை ரீ அரசு நிரப்பியது தெரியவந்தது. இந்த மோசடியை எதிர்த்து, மஸான் துறைமுக நகரில் 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மக்கள் போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை ரீ அரசின் போலீஸ் கொடூரமாக அடக்கியது. நகரை துண்டித்தது. என்ன நடக்கிறது என்பதே வெளியே தெரியவில்லை. ஆனால், ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி கிம் ஜு யுல் என்ற உயர்நிலைப்பள்ளி மாணவனின் உடலை மீனவர்கள் கடலில் கண்டுபிடித்தனர். அவன் கண்ணீர் புகை குண்டால் தலையில் தாக்கப்பட்டு, மண்டையோடு பிளந்து இறந்திருப்பது கண்டறியப்பட்டதும் மக்கள் கொந்தளிப்பு அதிகரித்தது. இந்தப் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்ட்டுகளே தூண்டுதலாக இருப்பதாக ஜனாதிபதி ரீ திசைதிருப்ப முயன்றார். ஆனால், மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மாணவர்கள் போராட்டமாக தொடங்கி, நாடுமுழுவதுமான மக்கள் போராட்டமாக இது மாறியது. ராணுவம், போலீஸ் ஆகியோரின் எண்ணிக்கைக்கு அதிகமாக மக்கள் போராட்டம் விரிவடைந்ததும், ராணுவத்தினர் மக்கள் பக்கம் திரும்பினார்கள். இதையடுத்து ரீ ஹவாய் தீவுக்கு தப்பி ஓடினார். தேர்தலில் வெற்றிபெற்ற லீயையும் அவருடைய மனைவியையும் அவருடைய மகனே கொன்றான். பிறகு அவனும் தற்கொலை செய்துகொண்டான்.
இதையடுத்து தென்கொரியாவில் 1960 ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பிரதமர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. யுன் போ சியோன் ஜனாதிபதியாகவும், அதிகாரமிக்க பிரதமர் பதவிக்கு சாங் மியானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்தாலும், அரசியல் நிலைத்தன்மை உருவாகவில்லை. இதற்கும் அமெரிக்கா ராணுவமே துணையாக இருந்தது. அரசியல் குழப்பத்தை காரணம் காட்டி, ராணுவ தளபதி பார்க் சுங் ஹீ ராணுவ கலகத்தில் ஈடுபட்டு, புதிய அரசை கலைத்தார். அதற்கு பதிலாக ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார். இதை மூன்றாவது தென்கொரியா குடியரசு என்று அழைத்தார்கள்.
இந்த ராணுவ அரசு குறித்து பிறகு பார்க்கலாம்…
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
கம்யூனிஸ்ட்டுகளை கொன்று குவித்த தென்கொரியா! கொரியாவின் கதை #14
அடுத்த பகுதி:
அமெரிக்காவின் பணத்துக்காக தென்கொரியா வீரர்கள் விற்பனை!!! #16