Skip to main content

ஒரே நாளில் 22 பேரை பழித் தீர்த்த பூலான் தேவி; முதல்வரை ராஜினாமா செய்ய வைத்த சம்பவம் -  திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 61

Published on 07/08/2024 | Edited on 07/08/2024
thilagavathi ips rtd thadayam 61

22 கொலைகளை ஒரே நாளில் செய்து, பின் நாளில் பாராளுமன்ற உறுப்பினரான பூலான் தேவியின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பூலான் தேவி, திருமணமாகி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி காயமாகிறார். அதன் பிறகு கைலாஷினுடைய ஏற்பட்ட காதலால் கொள்ளைக்கூட்டத்தில் சிக்கி கொள்ளைக்கூட்டத் தலைவனான பாபு புஜ்ஜரின் பாலியல் இச்சைக்கு ஆளாகி சின்னபின்னாகி தப்பித்து வீட்டுக்கு வருகிறாள். அவளைத் தேடி, வந்த பாபு புஜ்ஜர் பூலான் தேவியினுடைய குடும்பத்தை மிரட்டுகிறான். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு... 

இவன் மிரட்டியதில் பூலான் தேவியும், பாபு புஜ்ஜரோடு கிளம்புகிறாள். ஆனால், அவளை வழிமுழுவதும் அடித்தும் துன்புறுத்தியும் வருகிறான். அந்த இடத்திற்குச் சேர்ந்ததும், பழையபடி பூலான் தேவியை பாபு புஜ்ஜர் பாலியல் வன்புணர்வு செய்கிறான். இதனைக் கண்ட பாபு புஜ்ஜருக்கு அடுத்த நிலையில் உள்ள விக்ரம் மல்லா, இந்த சம்பவத்தை தட்டிக் கேட்கிறான். இதில் இருவருக்கும் சண்டை வந்து பாபு புஜ்ஜரை விக்ரம் மல்லா துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான். அவன் இறந்த பிறகு, விக்ரம் மல்லா அந்த கொள்ளை கூட்டத்திற்குத் தலைவன் ஆகிறான். இவ்வளவு பெரிய சிக்கலில் இருந்து தன்னை காப்பாற்றிய விக்ரம் மல்லாவின் காதலியாக பூலான் தேவி ஆகிறாள். தான் மட்டும் மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த கொள்ளைக் கூட்டமும் பூலான் தேவியை மரியாதையாக நடத்த வேண்டும் என்ற முறையில் தான் விக்ரம் மல்லா நடந்துகொள்கிறான். இவனது நடத்தை பூலான் தேவிக்கு பிடித்துப் போகிறது

பூலான் தேவிக்கு எழுத்து படிப்பு, துப்பாக்கி சுடும் பயிற்சி, கொள்ளையடிப்பது என எல்லாவற்றையும் விக்ரம் சொல்லிக்கொடுக்கிறான். இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எண்ணி புட்டிலாலுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பூலான் தேவி நினைக்கிறாள். அதன்படி, தன்னுடைய கொள்ளைக் கூட்டத்தை அழைத்து புட்டி லாலுனுடைய வீட்டுக்கு பூலான் தேவி சென்று அவனை கடுமையாக அடிக்கிறார்கள். அதன் பிறகு, அவனை மிரட்டிவிட்டு வந்துவிடுகிறார்கள். இதற்கிடையில், விக்ரம் மல்லாவினுடைய கொள்ளைக் கூட்டத்தில் உள்ள லாலா ராம், ஸ்ரீ ராம் என்ற இருவர் காவல்துறையினரிடம் சிக்கி சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம், பூலான் தேவி யார் என்பது பற்றியும், கொள்ளைக் கூட்டத்தின் அவளுடைய பங்கு என்பதையும் , பாபு புஜ்ஜரை கொன்று விக்ரம் மல்லா கொள்ளைக் கூட்டத்தினுடைய தலைவன் ஆகி எண்ணற்ற கொள்ளைகள் செய்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த அவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விக்ரம் மல்லாவும், பூலான் தேவியும் எப்படி தலைவர்கள் ஆகலாம் என்ற மேல்தட்டு மனோபாவத்தில் ஆத்திரமடைகிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்து கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்து விக்ரம் மல்லாவை கொல்ல திட்டுமிட்டு கொலை செய்கிறார்கள். அவன் இறந்த பின், பூலான் தேவியை கைப்பிடியாக இழுத்து தாக்கூர் நிறைந்த பெஹ்மாய் என்ற கிராமத்தில் வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இவர்கள் இருவர் மட்டும் செய்தது மட்டுமல்லாமல் அந்த ஊரில் உள்ள தாக்கூர் அனைவரையும் அழைத்து பூலான் தேவியை பாலியல் வன்புணர்வு செய்ய வைக்கிறார்கள். 

மேலும், பூலான் தேவியை வீட்டு வேலை, தெரு வேலை அனைத்தையும் செய்ய வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பூலான் தேவியின் அடைகளை கழற்றி அனைத்து வேலைகளையும் செய்ய சொல்ல பூலான் தேவி மறுத்துவிடுகிறார். அதனால், அவளை அடித்து நிர்வாணமாக்கி ஊர் முழுவதும் ஊர்வலமாகக் கூட்டிச் செல்கிறார்கள். அதன் பிறகு, ஒரு நாள் இவர்களிடம் இருந்து பூலான் தேவி தப்பித்து எல்லா சாதிகள் இருக்கின்ற ஒரு புதிய கொள்ளைக் குழுவை கட்டமைக்கிறாள். தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தும் அவளுக்குள் காட்டுத்தீயாக பரவுகிறது. அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் பயிற்சிகள் எல்லாம் கொடுத்தற்கு பின்பு, 1981ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அந்த குழுவோடு பெஹ்மாய் கிராமத்திற்குச் செல்கிறாள். லாலா ராம் மற்றும் ஸ்ரீ ராம் அங்கு இல்லாததால், அந்த ஊரில் இருந்த தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த ஆரோக்கியமான ஆண்களை வரிசையாக நிற்க சொல்கிறாள். இவர்களிடம் தப்பிக்க முடியாமல் ஒரு 22 பேர், பூலான் தேவி முன்னால் வரிசையாக நிற்கிறார்கள். 22 பேரையும் முட்டி போட வைத்து அவர்கள் அனைவரையும் பூலான் தேவி மட்டும் தனியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கிறார். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு தானே நியாயம் தேடிக்கொண்டாள் என்ற செய்தி உலகளவில் பேசப்படுகிறது. 

ஒரு நாளிலே 22 பேர் கொல்லப்பட்டதால் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என நினைத்து அன்றைக்கு உ.பி முதல்வராக இருந்த வி.பி.சிங் ராஜினாமா செய்தார். அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பூலான் தேவியை பிடிக்கச் சிறப்பு காவல் படையை உருவாக்கி உத்தரவிடுகிறார். ஆனால், பூலான் தேவியை கடைசி வரைக்கும் பிடிக்கமுடியவில்லை. இந்திரா காந்தி, ஒரு குழ அமைத்து பூலான் தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்து சரணடையச் சொன்னாலும் அவர் மறுத்துவிடுகிறார். மத்திய பிரதேச எல்லைக்கும் உத்தரப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் பூலான் தேவியினுடைய கொள்ளைக் குழு செயல்படுவதால் மத்தியப் பிரதேச காவல் படையும் பூலானை பிடிக்க தேடுகிறது. அதில் ராஜேந்திர சித்ரவேதி என்ற இன்ஸ்பெக்டர், பூலான் தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சில நிபந்தனைகள் விதித்து சரணடைய ஒப்புக்கொண்டார். காக்கி சட்டையோடு தான் சரணடைவேன், சரண் அடைந்து பிறகு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும், சிறையில் இருக்கும் காலத்தில் கைவிலங்கு போடக்கூடாது, மத்தியப் பிரதேச சிறையில் தான் இருப்பேன் இது மாதிரியான பூலான் தேவியினுடைய நிபந்தனைகளை அரசு ஏற்கிறது. 

இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தில் பூலான் தேவி மீது இருக்ககூடிய அத்தனை வழக்குகளையும் முலாயம் சிங் யாதவ் தள்ளுபடி செய்கிறார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பூலான் தேவி, குற்றச்சம்பவங்களுக்குத் தள்ளப்பட்டார் என்ற கண்ணோட்டத்தில் அதை தள்ளுபடி செய்கிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று போடப்படுகிறது. மொத்த வழக்குகளையும் தள்ளுபடி செய்தது சரியில்லை எனவே, சிலவற்றை விசாரிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால், பூலான் தேவிக்கு 11 வருடங்கள் சிறை கிடைக்கிறது. 11 வருடங்கள் கழித்து வெளியே வந்த இவர், சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து மிர்ஷாபூர் தொகுதியில் வென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அதன் பிறகு, உமேத் சிங் என்பவரைத் திருமணம் செய்கிறார். சிறையில் இருந்த காலத்தில் அம்பேத்கரைப் பற்றி நிறைய படித்ததால், இவர்கள் இருவரும் சேர்ந்து புத்த மதத்திற்கு மாறினர்.  

பூலான் தேவியினுடைய வாழ்க்கை சரித்திரத்தை பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் என்பவர் பண்டிட் குயின் என்ற திரைப்படம் எடுத்து 1994ல் ரிலீஸ் செய்தார். அந்த படத்தில் நிர்வாணமாக தோன்றும் பூலான் தேவியினுடைய கதாபாத்திரத்தை, திரையரங்கில் உள்ளவர்கள் விசிலடித்தும், சந்தோஷமாக பார்ப்பதால், தன்னுடைய கஷ்ட காலங்களை இப்படி சந்தோஷமாக பார்க்கிறார்கள் எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் தீக்குளிப்பேன் என்று பூலான் தேவி சொல்கிறார். அதன் பிறகு, பூலான் தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்ட ஈடு கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார்கள். உயிருக்கு ஆபத்து இருப்பதால் எம்.பியாக இருந்த பூலான் தேவி பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்க, வழக்குகள் சில நிலுவையில் இருப்பதால் உ.பி அரசு அதை மறுத்துவிடுகிறது. கடந்த 2001ல் டெல்லியில் எம்.பிக்கான பங்களாவில் பூலான் தேவி தங்கியிருந்த போது, மூன்று பேர் காரில் வந்து இவரை துப்பாக்கியால் சுடுகிறார்கள். அங்கு இருந்த காவல்ர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பூலான் தேவி இறந்துவிடுகிறார். பூலான் தேவியை கொன்ற ஷெர்சிங் ராணாவை போலீசார் பிடித்து விசாரித்ததில், பூலான் தேவி தாக்கூர்களை இழிவுப்படுத்தியுள்ளார். 22 தாக்கூர்களை பூலான் தேவி கொன்றதில் எங்களுடைய உறவினர்களும் அதில் இருந்தார்கள். அதற்கு பழி தீர்ப்பதற்காக பூலான் தேவியை சுட்டேன் என வாக்குமூலம் கொடுக்கிறார். அவருக்கு தண்டனை கொடுத்து அவரும் சிறையை விட்டு வெளியே வருகிறார். 

22 பேரை சுட்டுக்கொன்ற இடமான பெஹ்மாய் என்ற இடத்தில் அவர்களின் நினைவாக நினைவுத்தூண் கட்டியிருக்கிறார்கள். இன்னமும், தாக்கூர் சமுதாயம் பூலான் தேவி மீது கோபத்தோடு இருக்கிறார்கள். இங்கு பிற தாழ்த்தப்பட்டவர்கள், பூலான் தேவியை கொண்டாடுகிறார்கள். 

சார்ந்த செய்திகள்