குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முன்பே அவர்களது வாழ்வுக் காலம் முடிந்த வழக்கு ஒன்றினைப் பற்றி ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் விவரிக்கிறார்.
சென்னையில் தொடர்ச்சியாக குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த மூவரை போலீசார் விசாரிக்கையில் ஒரு காரை எக்மோர் அருகே திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும் காரைத் திருடிய கும்பல் கூறுகையில் எக்மோர் பக்கத்தில் ஒரு டிராவல்சில் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை திருப்பதி வரை செல்ல வேண்டும் என்று, ஒரு ஆம்னி வண்டியை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர், டிராவல்ஸ் தனது ஓட்டுநரை உடன் அனுப்ப மூவரும் கிளம்பியுள்ளனர். போகிற வழியில் மூக்குத்தி குப்பன் என்பவர் கையில் நைலான் கயிறு போன்ற சாதனங்களுடன் காரில் ஏறியுள்ளார். வண்டி திருவள்ளூரைக் கடந்து கொசஸ்தலை ஆற்றை நெருங்கியது. அங்கு சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்திவிட்டு. பின், மூவரும் ஓட்டுநரை லுங்கியால் சுற்றி, நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு பாலத்தின் அடியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சில மணி நேரம் கழித்து வந்து பார்த்ததில் உடல் சரியாக மூழ்காததால், அதனை தண்ணீருள் தள்ளிவிட்டு திருநெல்வேலிக்கு திருடிய காரில் பறந்துள்ளனர். கொன்ற டிரைவர் கட்டியிருந்த வாட்சையும் இவர்கள் திருடியுள்ளனர். பின்பு, அது ஆட்டோமேட்டிக் வாட்ச் என்பதும் அதனை திருவொற்றியூரில் 150ரூபாய்க்கு அடகு வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
திருடிய காரை தங்களுக்கு நெருங்கிய வக்கீல் ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து பின் மீட்பதாக சொல்லியுள்ளனர். இவர்கள் கூறியது உண்மையா என எக்மோர் டிராவல்ஸ், திருவள்ளூர் காவல்நிலையம், வக்கீல் போன்றவர்களிடம் போலீசார் கேட்டு சரிபார்த்தனர். பின்னர், அடையாளம் தெரியாத நபரின் உடல் கிடைத்ததும், காரும் டிரைவரும் காணவில்லை என டிராவல்ஸ் புகார் அளித்துள்ளதும், அந்த கார் வக்கீலிடம் இருப்பதும் தெரியவந்தது. இதன் பின், போலீசார் வழக்கு பதிந்து ரிமாண்ட் செய்தது. இந்த வழக்கை டீல் செய்த காவலர் ஜெகதீசன் பின்பு ஏ.டி.எஸ்.பி ஆகி பணிஓய்வு பெற்றார்.
24 வருடம் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சமீபத்தில் கூட காவலர் ஜெகதீசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஆறுமாதத்திற்கு முன் அந்த வழக்கில் சாட்சி சொல்லிவிட்டு வருகிறார். ஆனால், குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவரான மூக்குத்தி குப்பன் இறந்து விட்டார், மற்ற இரண்டு குற்றவாளிகளான ஸ்ரீனிவாசனுக்கு 60 வயதும், ஜானுக்கு 50 வயதும் ஆகிறது.
வழக்கை விசாரித்த காவலர் ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த வழக்கை உடலைக் கைப்பற்றிய வழக்கு பதிந்த திருவள்ளூர் காவல் நிலையம் தான் தொடரும். மேலும், சாட்சியங்கள் எல்லாம் குற்றவாளியென சொல்லப்படுபவர்களுக்கு எதிராக இருப்பதால் நிச்சயம் இத்தனை ஆண்டு கழித்தும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும்.