தனக்கு வியப்பைத் தந்த ஒரு வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு வழக்கு இது. எம்.கே.பாலன் என்பவர் வாக்கிங் வந்தபோது காணாமல் போனார். அந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. போலீசாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எம்.கே.பாலன் என்பவர் 1991 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏவாக இருந்தவர். அதன் பிறகு அவர் திமுகவுக்கு வந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது. அவருடைய மகன் போட்ட ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு 2002 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பிணவறைகளில் தேடல் நடத்தப்பட்டது. பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. எந்தத் தகவலும் இல்லை. மற்ற மாவட்டங்களிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. பாலன் தினமும் வாக்கிங் செல்லும் இடத்துக்கு போலீசாரும் தினமும் சென்றனர். அங்கு வாக்கிங் வரும் ஒருவர், தான் அந்த குறிப்பிட்ட நாளில் பாலனைப் பார்த்ததாகக் கூறினார். தன்னைக் கடந்து அவர் நடந்து சென்றதாகக் கூறினார். இன்னொரு நபரும் அந்த நாளில் பாலனைப் பார்த்ததாகக் கூறினார். உயரமான நபர் ஒருவர் டாடா சுமோவில் வந்ததாகவும், அவருடன் பேசிய பிறகு பாலன் திணறியதாகவும், அவரை வற்புறுத்தி வண்டிக்குள் அவர்கள் ஏற்றிச் சென்றதாகவும் கூறினார்.
அந்த வண்டிக்குப் பின்னால் ஹீரோ ஹோண்டாவில் ஒருவர் பின்தொடர்ந்து சென்றதாகவும் அவர் கூறினார். விசாரணை தொடர்ந்தது. தகவல் சொல்ல பொதுமக்களுக்கும் நம்பர் வழங்கப்பட்டது. அந்த குறிப்பிட்ட நாளில் அந்தப் பகுதியில் வண்டிகள் அதிகமாக வந்ததாகவும், பூங்கா நகர் மாணிக்கம் என்கிற அதிமுக புள்ளிக்கு இதில் சம்பந்தம் இருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தன. கடத்தியவர்கள் சேமியா கம்பெனி ஒன்றை அந்த நேரத்தில் வாடகைக்கு எடுத்தது தெரிந்தது. அதில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது. அந்த நாளன்று ஒரு வண்டியில் சிலர் வந்து அந்த கம்பெனியின் மாடிக்குச் சென்றது தெரியவந்தது.
அதன் பிறகு பூங்கா நகர் மாணிக்கத்தின் டிரைவர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மாணிக்கத்துக்கு நெருக்கமான பலரின் பெயர்களை போலீசாரிடம் கூறினார். அந்த சேமியா கம்பெனிக்கு சென்று பார்த்தபோது ஜன்னலில் ஒரு இரும்புச் சங்கிலி தென்பட்டது. அங்கு ஒரு ஆள் தங்கியிருந்ததற்கான அடையாளம் இருந்தது. ஆனால் அப்போது அங்கு யாரும் இல்லை. பாலனின் நட்பு வட்டத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் கொலையைச் செய்தது செந்தில்குமார் என்கிற ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. அவருக்கு ஹரிஹரன் என்கிற நண்பர் ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் பூங்கா நகர் மாணிக்கம் உள்ளிட்ட பல ரவுடிகளை இயக்கி வந்தனர்.
- தொடரும்..,