டேட்டிங் ஆப் மூலம் ஏமாற்றப்பட்ட பெண்ணுடைய வழக்கு குறித்த விவரங்களை முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்
மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு குற்றங்களும் அதிகரித்தன. மொபைலால் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், பல தவறுகளுக்கும் அது காரணமாக அமைந்துவிடுகிறது. மொபைல் வந்த பிறகு யார் உண்மை சொல்கிறார்கள், யார் பொய் சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இன்று பலருக்கு திருமணம் காலதாமதமாகியே நடக்கிறது. பெண்களுக்கான எதிர்பார்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. ஜாதகத்தினாலும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக சில பெண்கள் டேட்டிங் ஆப்கள் மூலம் தங்களுக்கான துணையைத் தேட முயல்கின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே விளைவுகள் அமையும். ஒரு பெண் நம்மிடம் கேஸ் கொடுத்தார். டேட்டிங் ஆப்பின் மூலம் தான் சந்தித்த பையன் குறித்து விசாரிக்கச் சொன்னார். அவனை நாம் பின்தொடர்ந்த போது, அவன் சொன்ன அனைத்தும் பொய் என்பதும், அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பதும், அவனுக்கு குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது.
இது தெரிந்ததும் அந்தப் பெண்ணுக்கு மிகுந்த அதிர்ச்சியானது. இதுபோன்று ஆன்லைனில் பழகுபவர்கள் முதலில் எதிரில் இருக்கும் மனிதரின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இப்படியான வழக்குகள் இப்போது நம்மிடம் அதிகம் வருகின்றன. இன்னொரு வழக்கில் பையனிடம் ஒரு பெண் மிகப்பெரிய அளவிலான பணத்தைப் பிடுங்கி ஏமாற்றினார். கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாயை அந்தப் பெண் ஏமாற்றினார். கல்யாணத்துக்கு அந்தப் பெண் சம்மதிக்காததால் சந்தேகப்பட்ட அந்தப் பையன் நம்மிடம் வந்தார்.
அந்தப் பெண் இதே தொழிலாக இருப்பது நம்முடைய விசாரணையில் தெரிந்தது. இதுபோன்ற ஆப்கள் மூலம் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் இருக்கின்றனர். ஏமாற்றப்பட்டவர்களும் இருக்கின்றனர். எதையுமே நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் நன்மையும் தீமையும் இருக்கிறது. சைபர் கிரைம் குற்றங்கள் இன்று பெருகி வருகின்றன. அப்படியான பிரச்சனைகளோடு வரும் பெண்களிடம் சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கச் சொல்லி நான் வழிகாட்டுவேன். சிலர் தைரியமாக புகார் தெரிவிக்கின்றனர். சிலர் பயப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் உதவுகிறோம்.