Skip to main content

பழனிபாபா சொன்ன ஒரு வார்த்தை; விடுதலை செய்த நீதிமன்றம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 17

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

​​​​T

 

தமிழ்நாட்டில் தன்னுடைய பேச்சால் பலரையும் கவர்ந்திருந்தவர் பழனி பாபா என்னும் அரசியல் களச் செயற்பாட்டாளர். அவர் குறித்து நம்மிடம் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

பழனி பாபா 50களில் பிறந்தவர். அவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் ஒரு விசாலமான மனநிலையை வளர்த்துக்கொண்டவர். அவருடைய லட்சியங்களுக்காகவே, செல்வந்தராக இருந்தாலும் பல்வேறு இன்னல்களை அவர் எதிர்கொண்டார். அவருடைய மரணம் கொடூரமாக இருந்தது. எந்த நேரமும் தனக்கு மரணம் நேரலாம் என்பதை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்பா இறந்துபோனதால் பழனி பாபாவின் அம்மா தான் அவரை வளர்த்தார். இஸ்லாம் மதத்திலும் சித்தர்கள் பலர் இருக்கின்றனர். தன்னுடைய தேடலால் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டார் பழனி பாபா.

 

காசி யாத்திரையும் சென்றார் பழனி பாபா. ஞானம் குறித்த தேடல் அவருக்கு நிறைய இருந்தது. கிட்டத்தட்ட ஆசைகளைத் துறந்தவராகவே அவர் வாழ்ந்து வந்தார். மூக்கையா தேவர் இவரை இந்திரா காந்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இவருடைய பேச்சு இந்திரா காந்திக்கு பிடித்தது. அகமது அலியாக இருந்த அவருடைய பெயர் பழனி பாபாவாக மாறியது. எம்ஜிஆருக்கும் இந்திரா காந்திக்கும் இடையிலான பாலமாக பழனி பாபா இருந்தார். உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு பிரச்சனை வந்தபோது படம் வெளியாக உதவியவர்களில் பழனி பாபாவும் ஒருவர். 

 

மக்களை நல்வழிப்படுத்தும் சொற்பொழிவுகளை அவர் தொடர்ந்து ஆற்றி வந்தார். சில சமயங்களில் அவருடைய பேச்சுக்களில் அதிக காரம் இருக்கும். தன்னை இனத்தால் திராவிடன் என அடையாளப்படுத்திக் கொண்டவர் பழனி பாபா. வர்ணாசிரம தர்மத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சனாதனத்துக்கு எதிராக இருந்தார். அவருடைய பேச்சுக்கள் கருத்தளவில் திமுகவினரின் பேச்சுக்கள் போலவே இருக்கும். அவருடைய வழக்குகளுக்கு எப்போதும் அவரே தான் வக்கீலாக ஆஜராவார். 

 

ஒருமுறை கமலாலயத்தில் குண்டு வீசப்பட்டபோது பழனி பாபாவின் பேச்சு தான் அதற்கான தூண்டுகோல் என்று அவர் மீது வழக்கு பதியப்பட்டது. அப்போது அவர் ஏற்கனவே சிறையில் தான் இருந்தார். எனவே தன்னை வெளியே சென்று பேச அனுமதித்த சிறை அதிகாரிகளின் மீதும் வழக்குப் பதிய வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி அவரை விடுதலை செய்தார். இதுபோன்று அதிகாரிகளுக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் பழனி பாபா.