தான் சந்தித்த ஒரு வழக்கு குறித்து நம்மிடம் மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் விவரிக்கிறார்
திருவள்ளூர் மாவட்டத்தில் நான் பணிபுரிந்தபோது புதிதாக பண்ணை வீடு ஒன்று தென்பட்டது.
விசாரித்தபோது அந்த வீடு மாவட்ட கவுன்சிலராக இருந்த ஒருவருக்கு நெருக்கமானது என்பது தெரிந்தது. நாங்கள் விசாரித்ததை அறிந்து அவர் என்னை நேரில் சந்திக்க வந்தார். அவருடைய கட்சியில் பொறுப்பில் இருந்த அய்யனார் என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தான் தன்னுடைய குடும்பத்துடன் ஒரு வருடமாக அங்கு இருப்பதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் அய்யனார் கூறினார்.
சில காலம் கழித்து மார்வாடி பெண் ஒருவரைக் கொலை செய்துவிட்டு 90 லட்சம் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையன் குறித்த ஒரு போட்டோவை என்னிடம் போலீசார் காட்டினர். அது அய்யனாரின் சிறுவயது புகைப்படம் போலவே இருந்தது. அய்யனாரை வரச்சொல்லி அனுப்பினேன். அய்யனார் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் அருகில் இருந்த காவலர்கள் இவர்தான் குற்றவாளி என்று சைகையில் சொன்னார்கள். குற்றங்கள் நடந்த பல்வேறு இடங்களில் விசிட்டிங் கார்டாக அவருடைய கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை அவரிடம் சொன்னேன்.
அவரே உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றேன். அவர் சற்று மிரண்டுவிட்டார். அவர் என்னென்ன தவறான காரியங்களை இதுவரை செய்துள்ளார் என்று அவரை அழைத்து வந்த கவுன்சிலரிடம் தெரிவித்தேன். சட்டப்படி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அந்த கவுன்சிலர் கூறினார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று பல்வேறு சொத்துக்களை அய்யனார் வாங்கியது அம்பலமானது. அவரை அறியாமல் அவருடைய கைரேகையை அனைத்து இடங்களிலும் அவர் விட்டுச் சென்றுள்ளார்.
அவருடைய உண்மையான பெயர் அய்யனார் கிடையாது. அவருடைய ஊரான திருவண்ணாமலையில் அவருடைய சொந்தக்காரர்கள் அனைவருக்கும் இதுதான் வேலை. கொள்ளையடிப்பது, அதைத் தடுக்க வருபவர்களைக் கொலை செய்வது. இவரும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தார். கைரேகை என்கிற தடயத்தால் அவர் சிக்கினார். அவர் மீது 10 வழக்குகள் இருந்தன. ஓராண்டு காலமாக அவரைத் தேடியபோது அவர் இந்தியா முழுக்க சுற்றி வந்தார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த அனைத்தும் மீட்டுத் தரப்படும்.