இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மிடையே பகிர்ந்து வருகிறார். பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியின் வழக்கு பற்றி நம்மிடையே விவரிக்கிறார்.
பாதுகாப்பு துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த அதிகாரி பணி மாற்றம் ஆகி சென்னைக்கு வருகிறார். நல்ல நேர்மையான அதிகாரி, வேலையில் அதிகமான பதக்கங்கள் பெற்று அமைதியான குடும்பமாக மனைவி மற்றும் பள்ளி சென்று கொண்டிருக்கும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வேலை ரிஸ்க்கான வகையைச் சேர்ந்தது. அவருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் என்பது இந்திய அரசே பெற்றுத் தந்துவிடும்.
ஒருநாள் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த அதிகாரி திடீரென்று மர்மமான முறையில் இறந்துவிட்டதாக அவர் மனைவியிடம் இருந்தே அழைப்பு வந்தது. அவரது துறை சார்ந்த காவலர்களும் வந்தனர். நாங்களும் சென்றோம். தடயவியல் நிபுணர்களும் வந்தனர். அவர்கள் வந்ததும் வழக்கம் போல முதல் கேள்வியாக, இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டனர். அந்த இறந்த அதிகாரி எல்.ஐ.சி மற்றும் பொதுவான ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி என்று இரண்டு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். மேற்கொண்டு தடயவியல் நிபுணர்கள் தங்கள் பணியை செய்யும்போது, ஒரு நிபுணர் அந்த சடலத்தின் வலது காலில் ஒரு மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று படிந்திருந்ததை பார்த்துச் சொன்னார்.
பின்னர், இவருக்கு யாரோ இந்த விபரீத கெமிக்கலை அறியாமல் கொடுத்து, மாரடைப்பு வரவைத்திருக்க வேண்டும் என்று சொன்னவுடன், அந்த இடத்தின் சூழலே பரபரப்பாக மாறுகிறது. இயற்கை மரணம் அல்லாது கொலை என்று கேஸ் ஆகிறது. ஒரு பிரபலமான தேர்ந்த வட மாநில அசிஸ்டண்ட் கமிஷ்னர் வருகிறார். இவர் குடும்பத்திடம் தகவல்களை வாங்கி விசாரணை நடைபெறுகிறது. மோப்ப நாய் கொண்டு அந்த பழைய பங்களாவை நோட்டம் விடப்பட்டது. அந்த நாயும் விசித்திரமாக ஒரு மர்ம நபரைக் கண்டு குரைத்துவிட்டு நேராகப் படி ஏறி கழிவு நீர் செல்லும் பாதையிடம் வந்து நின்று குரைத்தது. பாரென்சிக் துறையும், ஆராய்ந்ததில் அந்த கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்து நிறைய ஆணுறைகள் கிடைத்தன. ஆதாரங்களை எடுத்துக் கொண்டனர்.
அடுத்தகட்டமாக மூன்று நாள் கழித்து அதிகாரியின் விந்துகளும், ஆதாரத்தில் கிடைத்த விந்துகளும் பொருந்தவில்லை என்று பாரென்சிக் துறை தகவலை கொடுத்தது. உடனடியாக சந்தேகத்திற்கு உரிய மரணமாக மாற்றப்பட்டு, விசாரணையை ஆரம்பித்தோம். அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறியதை வைத்து அந்த அதிகாரியின் துறையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரின் மேல் சந்தேகம் வந்தது. உரிய முறைகளில் அவரது கால்ஸ், டவர் லொகேஷன் வைத்தும், அந்த நபருக்கும் குடும்பம் ஒன்று இருக்க, அவர்களை கூப்பிட்டு விசாரித்ததும், அவரும் உண்மையை ஒத்துக்கொண்டார். அதாவது அவருக்கும் அந்த அதிகாரியின் மனைவிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அதன் விளைவாக எதிர்பாராமல் இந்த அதிகாரியை கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது. இருவரையும் கைது செய்து அவர் மனைவியிடம் விசாரித்ததில் அவரிடம் பதிலன்றி மௌனமான திகைப்பு மட்டுமே கிடைத்தது.
பாலிசிக்கு உண்டான பணத்திற்கு, அவரது பெற்றோர் ஒரு கேஸ் போட்டார்கள். அவரது சட்ட வாரிசுக்கே அந்த பணத்தை கொடுக்குமாறு எங்களுக்கு உத்தரவு வந்ததின் பேரில், அப்படியே அதை செய்தோம். எனக்கு மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால், ஒரு பாதுகாப்பு துறைக்கே பாதுகாப்பு இல்லை என்பதுதான். இந்த வழக்கிற்கு பின்னர் இந்த சம்பவத்தை எங்கள் நிறுவனத்தில் ஒரு கேஸ் ஸ்டெடியாகவே வைத்திருக்கிறோம்.