"என் பயணம் எங்கும் நிறைவடைந்ததாக எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நிறைவடைதல் என்பது மரணம்தான்..." -வறுமை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் சென்னை ஓடி வந்து, பின் அங்கிருந்து மும்பை சென்று, இன்று உலக உணவு சந்தையில் தனக்கான முக்கிய இடத்தை பிடித்துள்ள 'தோசா பிளாசா' பிரேம் கணபதி கூறிய வார்த்தைகள் இவை. ஆதிகாலந்தொட்டே தமிழர்களின் வாழ்வியலில் தனித்த உணவாக இடம் பிடித்திருந்த தோசையின் சுவையை இன்று உலக மக்களின் நாக்குகளும் அறிய செய்தவர். 90களின் மத்தியில் நீங்கள் மும்பைக்கு பயணம் செய்து அங்குள்ள ஏதேனும் ஒரு கையேந்தி பவனில் சுவையான தோசை சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் அது ஒரு வேளை நம் பிரேம் கணபதியின் கடையாகக்கூட இருந்திருக்கலாம். ஆம் இந்த பயணத்தின் மையப்புள்ளி அங்கிருந்துதான் தொடங்குகிறது. அப்படியென்றால் தொடக்கப்புள்ளி??? அது வலிகளும், ஏமாற்றங்களும் நிரம்பிய சராசரி சாதனையாளரின் கதைதான்.
பத்தாம் வகுப்பு முடியப்போகிறது. மாணவர்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்பதை அறிய ஆசிரியர் ஒவ்வொருவரிடமாக ஆர்வமாக கேட்கிறார். அனைவரும் வழக்கமான பதில்களைச் சொல்லும்போது, ஒரு மாணவன் "நான் எங்க அண்ணாச்சியின் காப்பித்தூள் கடைக்கு வேலைக்கு போகிறேன்" என்றார். உங்கள் யோசனை சரிதான். அவர் பிரேம் கணபதியேதான்!!! சென்னையில் அண்ணாச்சி கடையில் நூறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்கிறார். இந்த பணம் இவர் கடையின் இன்றைய தோசை விலையை விடக் குறைவு. ஒரு வருடம் கழித்து, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஒருவரின் பேச்சை நம்பி மும்பை செல்ல அவர் பாதியில் கைவிட்டுப் போகிறார். கையில் பெரிய அளவில் பணம் இல்லை... மொழி தெரியாது.. ஆனாலும் திரும்பி செல்ல வேண்டும் என்ற மனம் இல்லை. தமிழர்கள் என்றாலே 'மதராசி' என்று ஏளனமாக பார்க்கும், அழைக்கும் போக்கு இருந்த காலகட்டம் அது. பேக்கரியில் தட்டுகளைத் துடைப்பது, ஓட்டல்களில் பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகள் மும்பையில் ஆரம்பக்கட்டங்களில் அவர் வயிற்றை கழுவ உதவின. ஊருக்கு திரும்பி சென்றால் அவமானப்படுத்துவார்கள் என்ற பயம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் அவரை ஈடுபட வைத்தது. அந்த முழு ஈடுபாடு இன்று இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட கிளைகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளிலும் கிளைகள் திறக்கும் அளவிற்கு வெற்றியாளராக பிரேம் கணபதியை மாற்றியிருக்கிறது.
நன்கு புளித்த ஒரு கரண்டி மாவை வைத்து கோடிக்கணக்காக சம்பாதித்து விட முடியுமா என்ற சந்தேகத்திற்கு, 'மாற்றி யோசித்தல்' என்பதுதான் என்னுடைய தொழில் ரகசியம் எனப் பதிலளிக்கிறார் பிரேம் கணபதி. நாமெல்லாம் அதிக பட்சமாக ஸ்பெஷல் தோசை, ஆனியன் தோசை, முட்டை தோசை, மசால் தோசை சாப்பிட்டிருப்போம். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தோசை வகைகளை இவர் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு ஒரு சுவை பிடிக்கலாம், வயதானவர்களுக்கு ஒரு சுவை பிடிக்கலாம், வெள்ளைக்காரர்களுக்கு ஒரு சுவை பிடிக்கலாம். இதையெல்லாம் நிவர்த்தி செய்யும் பட்சத்தில் மட்டுமே உலக சந்தையில் கொடி கட்டிப் பறக்க முடியும். இதற்கான ஆற்றலையும், திறமையையும் பிரேம் கணபதி காலம் அவரைக் கசக்கி பிழிந்த போதே பெற்றுவிட்டார்.
இளம் வயதில் மும்பையில் ஒரு டீக்கடையில் சிறிது காலம் வேலை பார்த்திருக்கிறார். அவரது வேலை அருகில் உள்ள கடைகளுக்கும், மார்க்கெட்டுகளுக்கும் டீ கொண்டு சென்று கொடுப்பது. சம்பளம் எல்லாம் கிடையாது, கமிஷன் மட்டும் உண்டு. அந்த கடையில் வேலை பார்த்தவர்களை விட இவர்தான் அதிகம் சம்பாதித்திருக்கிறார். "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் டீ குடிப்பதற்கு பிடிக்கும்... சர்க்கரை குறைவு, அதிகம்... டீத்தூள் குறைவு, அதிகம் என அவர்கள் கோரிக்கை வைப்பார்கள். பல கடைகளுக்கு ஓடிஓடிச் சென்று கொடுப்பதால் இதை மற்றவர்கள் மறந்துவிடுவார்கள். நான் மனதுக்குள் குறிப்பெடுத்து நியாபகம் வைத்துக்கொள்வேன். அதனால் சிறிது காலத்திலேயே பெரும்பாலான கடைக்காரர்கள் என்னிடம்தான் டீ கொடுத்து விட வேண்டும் என என் முதலாளியிடம் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு அதிக டீ விநியோகம் செய்பவனாக ஆகிப்போனேன்...". வாழ்க்கை நமக்கான பாடத்தை ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொடுத்து கொண்டேதான் இருக்கிறது. அதில் நாம் எதை கவனிக்கிறோமோ அதில் நாம் சிறந்தவராகிறோம் என்பதற்கு பிரேம் கணபதியின் வாழ்க்கையே நம் கண்முன் நிற்கும் ஒரு ஆகப்பெரும் தமிழ்சாட்சி.
"நாங்கள் தள்ளுவண்டியில் கடை போட்டிருக்கும்போது இரவு நீண்ட நேரம் திறந்திருந்த காரணத்திற்காக அதிகாரிகள் வந்து எங்கள் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். நாலு பலகை இருந்தாலும் அதை வைத்து மறுநாள் கடை போட்டுவிடுவோம். பின்பு ஒரு உணவகம் ஆரம்பித்தோம். நம்மை மற்றவர்கள் நினைவு வைத்திருக்க வேண்டும் என்றால் நமக்கான ஒரு தனித்த அடையாளம் வேண்டும் என்பது புரிந்தது. பீட்சா ஹட் போன்ற நிறுவனங்கள் அவர்கள் தயாரிப்பு பொருட்களின் பெயரிலேயே நிறுவனத்தின் பெயரை வைத்திருந்தன. அதன்படியே என் கடைக்கு 'தோசா பிளாசா' எனப் பெயர் வைக்க தீர்மானித்தேன்...". பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவருக்கு எவ்வளவு தீர்க்கமான பார்வை என்று பாருங்கள்!!!
வாழ்க்கை தினசரி கற்றுக்கொடுக்கும் பாடத்தை சரியாக உள்வாங்கி காலம் எனும் பயண ஓட்டத்தில் சரியான கனவினை நோக்கி ஓடுவோம்.... வெற்றி எனும் கோடு நம் பாதத்தை முத்தமிட்டு வரவேற்க காத்திருக்கின்றது.