குவாயாக்குய்ல் மிகவும் புகழ்பெற்ற இடம் அல்ல. கொளுத்தும் சூரியனுக்குக் கீழே கருப்புக்குடைகளைப் போல, அந்த விரிகுடாவில் மிகப்பெரும் பறவைகள் சுற்றித் திரிகின்றன. துரைமுகத் தொழிலாளர்கள் வேக வேகமாக நடக்கிறார்கள். மிகப்பெரும் வாழைப்பழ லோடுகளுக்கு அடியில் அவர்களது உருவம் தெரிகிறது. குவாயாக்குய்ல், ஈகுவடாரின் மிக முக்கிய செல்வமான வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கியமான துறைமுகம் ஆகும்.
|இந்த வாழைப்பழ நகரத்தில் இரண்டு விஷயங்கள் எனது கண்களில் பட்டன. இரண்டுமே அடிப்படையில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் அல்ல. ஒன்று, சாவைப் பற்றியது. குவாயாக்குய்ல் நகரின் கல்லறை உயரமான வளர்ந்த மரங்களுக்கும் மலர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் காட்சியளிக்கும். உண்மையில் ஈகுவடாரின் இதர பிரதேசங்களை ஒப்பிடும் போது குவாயாக்குய்ல் நகரத்தில் வாழ்வதை விட சாவதே நல்ல விஷயம்.
மற்றொன்று என்னை ஈர்த்தது, எனது நண்பரின் சிரிப்பு. வாழ்க்கையின் அற்புதமான அறிவிப்பு சிரிப்பு. அவரது பெயர் என்ட்ரிக் கில் கில்பர்ட். எவ்வளவு சத்தமாகவும், ஈர்ப்புமிக்கதாகவும் அவர் சிரிக்கிறார்! தெருவில், வாழை மரங்களின் அடியில், தூய்மையான வானத்தின் அடியில் நின்று கொண்டு மிகப்பெரும் கருப்பு பறவைகள் சூழ்ந்து நிற்க அவரது அட்டகாசமான சிரிப்பு ஒரு புயலைப் போன்றது அல்லது வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கிரானைட் கற்களைப் போல பளபளப்பானது. குவாயாக்குய்ல் நகர மக்கள் கில் கில்பர்ட்டின் சிரிப்பை நல்லதை அறிவிக்கும் ஓசையாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் அவர்கள் இப்போது அந்த சிரிப்பை அடிக்கடி கேட்க முடிவதில்லை. எனது நண்பர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் பல மகன்கள், பெட்ரோசாட், லூயிஸ் வால்டிவிசோ மோரன், ஜீசஸ் பரியா மற்றும் இதர பலரும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். அல்லது மரண தண்டனை கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பிரேசிலியர்கள் தொலைதூரங்களில் உள்ள தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டார்கள். அல்லது சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
லத்தீன் அமெரிக்காவின் பிற்போக்கு சக்திகள் ஜீசஸ் பரியாவின் உன்னதத்தை, பெட்ரோசாட் மற்றும் லூயிஸ் மோரனின் உறுதியை, கில் கில்பர்ட்டின் நம்பிக்கைமிக்க கதைகளை பார்த்து பயந்து போயிருக்கின்றன. எங்களது மாபெரும் கண்டத்தின் மக்களது நினைவுகளும் உணர்வுகளும் இந்த அமைதியான நண்பர்களுடனே இருக்கின்றன. அவர்கள் இருளின் ராஜ்ஜியத்தில் சூரிய ஒளிக்கீற்றைப் போல அறியாமையும் வன்முறையும் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சக் கீற்றைப் போல இருக்கிறார்கள்.
|இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியில் இருள் தோற்கடிக்கப்படும் என்பது தெளிவு. இது மரணத்தின் போராட்டம். இது இருட்டுச் சக்திகளின் கடைசி போராட்டம். அவற்றின் கடைசி ஆயுதம் வன்முறையும் சித்ரவதையும்தான்.
வன்முறை சற்று குறைவாக இருந்த நாடான சிலியில் இந்தப் போராட்டத்தின் உத்தி வேறுவிதமாக இருந்தது. இந்த நாட்களில் தீவிர வலதுசாரி மதகுருமார்களும், தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்தார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கையை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் மீது வைத்தார்கள். அவர்களது வேட்பாளர் பிரெய், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவதற்காக புரட்சிகர பாதையிலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொண்டவர். இரண்டு நாட்களுக்கு முன்பு பழைய கட்சிகள், நில உடமையாளர்கள் மற்றும் வட்டிக்கு கொடுத்து வாங்கும் நிதியாளர்கள் ஆகியோரின் கட்சிகளும் அவரை ஆதரித்தன. தற்போது அவரை வானத்திற்கும் மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதர லத்தீன் அமெரிக்க நாடுகளை விட இங்குள்ள நிலைமை சற்று பரவாயில்லை. எனினும் இதுவும் மோசமே. அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கு தாமிரச் சுரங்கங்களை தேசவுடைமையாக்குவதை தடுக்க முயற்சிக்கிறது. ஒரு விவசாய சீர்திருத்தம் நடப்பதை தவிர்க்க பணக்கார நிலவுடமையாளர்கள் முயற்சிக்கிறார்கள். அரசியலில் இருந்து மக்களை ஒதுக்கியே வைத்திருக்க ஆளும் வர்க்கம் அனைத்துக் காரியங்களையும் செய்கிறது. ராணுவக் கலகம் எதையும் நடத்தாமலே இதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
இந்த தருணத்தில் மக்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன. மூன்று நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி பதவிக்கான மக்கள் வேட்பாளர் டாக்டர் சால்வடார் அலண்டேயை சந்திக்க மிகப்பெரும் கூட்டம் கூடியது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நானும்கூட பேசினேன். சில நகைச்சுவை மிக்க கவிதைகளையும் வாசித்தேன். அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து இவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று வியந்து போனேன். இன்னும் கூட நாங்கள் மிகச் சரியான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கக் கூடும். இன்னும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேராகக் கூட இருக்கக் கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதிநிதிகள் மட்டுமின்றி எல்லோரும் பங்கேற்றார்கள். முன்னெப்போதும் எனது நாடு இத்தகைய மிகப்பெரும் பொதுக்கூட்டத்தை பார்த்ததில்லை. சிலி தேசத்தின் மக்கள் இன்றைக்கு தங்களது விடுதலையையும் அனைத்து லத்தீன் அமெரிக்க மக்களின் கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு உணர்ச்சிமிக்க தருணத்தில் நான் இத்தகைய சில வரிகளை எழுத சில நிமிட நேரங்கள் கிடைத்தது. பல நிர்ப்பந்தங்கள் இருந்தாலும், ஷேக்ஸ்பியரின் தினத்தையொட்டி ரோமியோ - ஜூலியட்டை மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டேன். இந்த அற்புதமான கவிதையை வாசிக்கும் போது நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். அது மிகவும் அன்பைப் பொழிந்த, அதை எழுதிய ஆசிரியரின் இதயத்தை உணர்த்துகிற, நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து மண்ணோடு மண்ணாகிப் போன அந்த கவிஞனின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிற காவியம். ஒரு துயர காதல் கதையான ரோமியோ - ஜூலியட் மக்களிடையே அமைதியை வலியுறுத்துகிற ஒரு மாபெரும் இலக்கியம். வன்முறைக்கும் போருக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிற படைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.
எனது உணர்வுகள் கொந்தளிக்கின்றன. நான் எனது கண்களை ஜூலியட் நடைபயின்ற தோட்டத்திற்குள் செலுத்துகிறேன். ரோமியோவுக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துகிறேன். எனது சொந்த நாட்டின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன்னர் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்கு முன்னர் இதெல்லாம் நடக்கிறது. நாளை டாக்டர் அலண்டேயும் நானும் சிலி தேசத்தின் தெற்குப் பகுதிக்கு பயணிக்கிறோம். அது ஒரு மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கப் பகுதி. தலைநகரிலிருந்து தொலைதூரத்தில் இருக்கிறது.
மத்தியப் பள்ளத்தாக்கில் வருவதற்கு முன்பாகவே அங்கு குளிர் வந்து விடும். அத்துடன் இதமான தட்பவெப்ப நிலையும், திராட்சை தோட்டங்களின் மணமும் வீசும்.
எனது குழந்தை பருத்தின் மழைத்துளிகள் தெற்கில்தான் நனைத்திருக்கின்றன. மழையின் வெள்ளிக் கம்பிகள் தரையை தொடும் போது எங்களது போராட்டத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன். அங்கே என்ன பார்த்தேன் என்பதைப் பற்றி அடுத்த முறை உங்களுக்கு எழுதுகிறேன்.
-ஏபிஎன் இண்டர்நேஷனல் நியூஸ் புல்லட்டின், மே 26, 1964.
முந்தைய பகுதி:
எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.