Skip to main content

" ஒரு படம் பூஜ போடுற அன்னக்கே சாவம் குடுக்குற ஆளுகளுக்கு மத்தியில.." - இம்சை அரசன் டாக்ஸ்#7

Published on 22/10/2019 | Edited on 23/10/2019

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமைவை தன்னுடைய தனித்துவமான உடல்மொழியால் வசீகரித்து வருபவர் வடிவேலு. அவருடைய இந்த சிரிப்பு பயணத்தில் அவர் கடந்து வந்த பாதைகள் ஏராளம். அவரின் சிரிப்பு மருந்தில் தன்னுடைய கஷ்டங்களை சில நிமிடங்களாவது மறந்தவர்கள் பலகோடி. அத்தகைய சிரிப்பு ராஜாவின் திரையுலக பயணத்தை நம்முடைய இதழில் அவர் தொடராக எழுதி வந்தார். அதில் ஒரு பகுதி வருமாறு,

 

vb



இம்புட்டு உழைப்பும் எதுக்கு? என்னய வாழவைக்கிற ஒங்கள சிரிக்க வைக்கத்தான். மக்கள்ட்ட இருந்து அம்புட்டு விஷயங்கள கிரகிச்சு வச்சிருக்கேன். இல்லேன்னா என்னால ஒருவருஷம் கூட சினிமாவுல காலந்தள்ளீருக்க முடியாது. டூரிங் டாக்கிசுல தரட்டிக்கட்ட எடுத்துக்கிட்டு முன்ன இருக்கவன் தல மறக்கிதுன்னு மணல குமுச்சு அதுல ஒக்காந்து "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்'னு சரோஜாதேவியம்மா வர்றத ரசிச்சவன் நான். பெஞ்சு டிக்கட்டுல மூட்டப்பூச்சி கடிய வாங்கிக்கிட்டே அந்தம்மா நடிச்ச எம்புட்டோ படங்கள பாத்திருக்கேன். "ஆதவன்' படத்துல கிட்டத்தட்ட நாப்பது நாளு அந்தம்மா கூட ஷூட்டிங்ல இருந்தேன். "தலைவர் எம்.ஜி.ஆர்.கூட ஒரு படத்துல நடிச்சிருந்தா எப்புடி இருக்கும்?'னு எனக்கு ரொம்பநா ஏக்கம். சரோஜாதேவியம்மா கூட நடிச்சப்ப... தலைவர் கூட நடிச்ச மாதிரியே அம்புட்டு சந்தோஷமா இருந்துச்சு.
 

gh



என்னய பாக்க வர்றவுங்க சில பேரு ‘"நாம வடிவேலு கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கது நெசந்தானா?'னு கைய கிள்ளிப் பாத்துக்குவாங்களாம். நான் சரோஜாதேவியம்மா கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கும்போது இப்புடிதேன் கைய கிள்ளிப் பாத்துக்கிட்டேன். "தரயில ஒக்காந்து பாத்த அந்த அம்மாகூட தெரயில ஒண்ணா நடிக்கிறமே'னு ஆச்சர்யமா இருந்துச்சு. "உன்னை ஒன்று கேட்பேன்... உண்மை சொல்ல வேண்டும்' என அந்த அம்மாவப் பாத்து நான் பாட... ‘"ஹேய்'னு அந்தம்மா கன்னத்துல கை வச்சு ரசிச்சாங்க. ‘"வேலு எங்க? வேலுவ கூப்பிடுங்க'னு அந்தம்மா எம்மேல ரொம்ப பிரியமா இருந்தாங்க. "என்னாங்க இது, ஒங்க மேல அந்தம்மா இம்புட்டு பாசமா இருக்காங்க?'னு உதயநிதியும், கே.எஸ்.ரவிக்குமாரும் கூட கேட்டாங்க. எம்.ஜி.ஆர். ஆக்ஷன்ல ‘"ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை'னு நான் பாடினப்போ "பாடு வேலு.. பாடு பாடு'னு கேட்டு ரசிச்சாங்க. "எப்புடிம்மா இம்புட்டு இளமயா இப்பவும் இருக்கீங்க?'னு கேட்டேன்.

 

vh



"பழய படங்கள போட்டுப் பாத்து ரசிப்பேன். அதிகமா காமெடி படங்கள் பாப்பேன். அதப்பாத்து மனசுவிட்டு சிரிப்பேன். நான் அனுமார் பக்தை. அவரோட ஆசியும் இருக்கு'னு சொன்னாங்க. அவரோட ஆரோக்கியத்துக்கும், உற்சாகத்துக்கும் நான் கண்டுபிடிச்ச காரணம் என்னன்னா... அவரோட நல்ல மனசு. "வேலு... இந்தப்படம் ரொம்ப நல்லா ஓடணும் வேலு. நான் ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்க வந்திருக்கேன். அதனால இந்தப்படம் நல்லா ஓடணும்னு கடவுள வேண்டிக் கிட்டிருக்கேன்'னு சொன்னாங்க. அந்த மகராசி வேண்டுனது மாதிரியே... "ஆதவன்' படம் நல்லா ஓடிச்சு. ‘"இந்தப்படம் ஓடாது, இவன் தேற மாட்டான்'னு ஒரு படம் பூஜ போடுற அன்னக்கே சாவம் குடுக்குற ஆளுகளுக்கு மத்தியில அந்தம்மாவோட நல்ல மனச பாத்தீங்களா? அந்த நல்ல மனசுதான் அந்தம்மாவ இன்னமும் ஆரோக்யமா வச்சிருக்கு'ங்கிறது என்னோட யூகம்.