'வடிவேலு' தமிழ் சினிமா தந்த சிரிப்பு மருத்துவர். ஆம், சிரித்தால் நோய் தீர்ந்து போகுமென்றால் அந்த சிரிப்புக்கு காரணமானவர்களை எப்படி அழைப்பது? இந்த பெயரை விட்டுவிட்டு. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமைவை தன்னுடைய தனித்துவமான உடல்மொழியால் வசீகரித்து வருகிறவர். அவருடைய இந்த சிரிப்பு பயணத்தில் அவர் கடந்து வந்த பாதைகளை நம்முடைய இதழில் தொடராக எழுதி வந்தார். அதில் அவரின் திரையுலக பயணத்தில் அவருக்கு உச்சகட்ட புகழை தந்த சில கதாப்பாத்திரத்தை பற்றி அவர் தனக்கே உரிய நடையில் கூறியதாவது,
பொதுவா நாட்டு நடப்புலருந்து கதயோ, காமெடியோ உருவாகும். ஆனா கைப்புள்ள காமெடி மாதிரி இருக்கு நம்ம நாட்டு நிலவரம். "வின்னர்' படத்துல கைப்புள்ளக்கிம், கட்டத்தொரக்கிம் பிரச்சன. ‘"கோட்டத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். அடிக்கப்படாது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்'னு கைப்புள்ள சொல்ற மாதிரி... "இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் பிரச்சன. ‘கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்'னு இந்தியா சொல்லுது. ஆனால் பாகிஸ்தான் கசாப்பு கோட்டத்தாண்டி வந்து மும்பையில எம்புட்டு பேர கொன்னு போட்ருக்கான். ஆனா அம்புட்டயும் சகிச்சுக்கிட்டு ‘"பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்'னு இருந்துக்கிட்டி ருக்கு இந்தியா. கசாப்புக்கு கோடிகோடியா செலவு பண்ணுது நம்ம சர்க்காரு. நம்ம நாட்டு வக்கீலு அவனுக்கு ஆஜராகி வாதாடுறாரு. இந்தியா வீரமான நாடுதான். ஆனா... ஜனநாயகம் காக்கணும்னு இப்புடி கைப் புள்ளயா இருக்கு. புள்ளைகள ரொம்ப செல்லங்குடுத்து பெத்தவுக கெடுக்குற மாதிரி ரொம்ப ஜனநாயக உரிம குடுத்து மக்களயும் கெடுத்து வச்சுருக்கம்னு தோணுது.
வீட்டப்பாரு, நாட்டப்பாரு, ரோட்டப் பாரு. ஒவ்வொருத்தரும் இந்த விஷயத்துல அக்கறயா இருந்தா நாடு நல்லா இருக்கும்ல. விமானத்த ரைட்ஸ் சகோதரர்கள் கண்டுபுடுச்சாங்க, சினிமாவயும், கரண்டயும் எடிசன் கண்டுபுடுச்சாரு, டெலிபோன கிரகாம்பெல்லும், ரேடியோவ மார்க்கோனியும் கண்டுபுடுச்சாங்க. நாம அரிசிய வச்சு இட்லி, பணியாரம், கொழக்கட்டனு கண்டு புடுச்சோம். பத்தும் பத்தாததுக்கு காதுகுத்து, சாமிகும்புடுனு விருந்த கூட்டீர்றது. ஒரு புள்ள வயசுக்கு வந்துரக்கூடாது... அடிடா பத்திரிக்கய, கூட்றா சாதிசனத்த, கொட்றா மேளத்த, வெட்றா கெடாயனு ஏழெட்டு ஆட்டுக்கெடாயா வெட்றது. ஆட்டத் தின்னு, மாட்டத்தின்னு, மட்டனத்தின்னு, மட்டயத்தின்னுனு தின்னு ஒடம்பு காலாவதியாகி, அதுக்கு காலாவதியான மருந்த வேற திங்கிறது. அப்புறம் கைகால் வௌங்காம சாக வேண்டியதுதான். நம்ம மக்களுக்கு இன்னொரு பெரிய பின்னடைவே செக்ஸ் மேட்டர்தான்.
மத்த நாட்லயெல்லாம் சின்ன வயசுலயே செக்ஸ் விஷயங்கள ஆண்டு அனுபவுச்சிட்டு அடுத்த கட்டத்த நோக்கிப் போறாக. நாப்பது வயசுல கூட "மைனர் குஞ்சு' நெனப்புல அடுத்த வீட்டுப் பொண்ணுகள பாத்து பல்லக்காட்றது. ‘"ஏண்டா எம் பொண்டாட்டியவா பாக்குற?' ஆத்தரத்துல அருவாள தூக்கிட்டு வந்து ஒரே போடா போட்டுட்டு ஜெயிலுக்கு போயிறுவான். அப்புறம் நெலம் நீச்சிய வித்து கேஸு நடத்தி வீணாப் போயிறுது அவிய்ங்க வாழ்க்க. இந்தக்காலத்து எளவட்டம் புத்திசாலிகதான். ஆனா கவருமெண்டு செலவுல நல்லா படுச்சுப்புட்டு வெளிநாட்டுக்கு கௌம்பீருதுக. அங்க போயி பல கண்டுபிடிப்புகள பண்ணி அந்த நாட்டுக்கு பெரும சேக்குறாக. இனிமேலாவது அந்நிய மோகம் இல்லாம நம்ம தாய் நாட்டுக்காக இளைஞர்கள் உழைக்கணும். செல்போன வெளிநாட்டுக்காரன் கண்டுபுடுச்சா... மிஸ்டுகால கண்டுபுடிச்சவன் இந்தியன்ங்கிற ஏளனத்த மாத்துற சக்தி இளைஞர்கள்ட்டத்தான் இருக்கு. இந்தியாக்காரன் மூளைக்கி ஒலகம் முழுக்கவே கெராக்கி. அந்த மூளய ஒங்கள சொமந்த மண்ணுக்கும் கொஞ்சம் செலவழிக்கணும்ல.
வீட்ல கக்கூஸு போகும் போது சும்மாவா இருக்கம். எதையாவது யோசிச்சபடி மூலய பாக்குறம், முடுக்க பாக்குறம். லேசா ஒட்டட இருந்தா ஒடனே சுத்தம் பண்றோம். அக்கம் பக்கத்துல யாராவது குடிவந்தா ‘யாரு என்னானு வெசாரிக்கணும். டவுட்டு இருந்தா போலீஸுக்கு சொல்லணும். தங்கீருக்கது தீவிரவாதியாக்கூட இருக்கலாம்ல. அவன் புடிபட்ட பின்னாடி ஒங்களயும் கையக்காட்டிப்புட்டான்னா இம்ச ஒங்களுக்குத்தான. சுத்துப்புறம் சுத்தமா இருக்காண்டும் பாக்கணும்ல. பக்கத்து வீட்டுல இருக்க குடும்பம் நாலுநாளா கதவத் தொறக்காம இருக்கும். "எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னா?'னு திரியிறது. வீடு வீச்சம் எடுத்தப்பின்னாடி எட்டிப் பாக்குறது. அங்க குடும்பமே சூஸைட்டு பண்ணிக் கெடக்கும். அதனால வீட்டச் சுத்தியும் விழிப்பா இருங்க. அதுக்குன்னு அக்கம் பக்கத்து வீடுகள கெட்ட எண்ணத்தோட நோட்டம் பாக்குறதும் நல்லதில்ல. அக்கம் பக்கத்து வீடுகள தப்பா அணுகாதீங்க... நட்பா அணுகுங்க. பொண்ணு பொடுசுக போகும்ங்கிற வெக்கம் மானம் இல்லாம ரோட்டோரத்துல ஒண்ணுக்கடிக்கிறது, ராங்ரூட்ல வண்டிய விடுறதுனு எதுலயும் ஒரு கட்டுப்பாடு கெடயாது. மக்கள் ஆக்ஸிடெண்டு ஆகாம, பாதுகாப்பாவும், வெரசாவும் ஊர் போயி சேரட்டும்னு கவருமெண்டு ரோட்ட போட்ருக்கு. போனவாரம் கார்ல ஊருக்கு போய்கிட்டுருந்தேன். அங்கிட்டி ருந்து வர்ற வண்டிக இங்கிட்டுருந்து போற வண்டிகளுக்கு டிஸ்டப்பு பண்ணாம நடுவுல சொவரு கட்ன மாதிரி கட்டி பிரிச்சு விட்றுக்காக.
"அடடே ரொம்ப பாதுகாப்பா இருக்கே... டெய்வரு வண்டிய அடுச்சு ஓட்டு'னு சொல்றேன். டெய்வரு படுஸ்பீடுல போய்க்கிட்டுருக்காரு. திடீர்னு பாத்தா எங்க ரூட்லயே எதுக்க ஒரு ‘குட்டிஆன வண்டி வருது. ஒத்த நிமுஷத்துல உசுரு போயி வந்துருச்சு. கார நிறுத்தச் சொல்லிப்புட்டு அந்த வண்டிக்காரன்கிட்ட ‘"ஏங்க இப்புடி ராங் ரூட்ல வர்றீக?'னு கேட்டா ‘"இப்புடியே ஓரம் எடுத்துப் போனா எங்க ஊரு பக்கம் சார். சரியான ரூட்ல போனா ஒரு கிலோமீட்டரு சுத்திக்கிட்டுல்ல போகணும்'னு சொல்லுது அந்தப் பக்கி. இப்புடி எதயுமே மதிக்கமாட்டம்னு திரிஞ்சா எப்புடி? எதுக்கெடுத்தாலும் கவருமெண்ட குத்தம் சொல்லாம கவருமெண்டுக்கும், போலீஸுக்கும், உளவுத்துறைக்கும் மக்கள் முடுஞ்ச அளவு ஒதவிகரமா இருந்தா நாடு நிம்மதியா இருக்கும்ங்க. யாரா இருந்தாலும் சொல்றேன்... வீட்டப்பாருங்க, நாட்டப்பாருங்க, ரோட்டயும் பாருங்க. மதிங்க. ‘"நாங்க படுற பாட்டுல இத வேற பாக்கணும்கிறானே வடிவேலு'னு இத படிக்கிறவுக நெனைக்கலாம். முழுசா பாக்கலேன்னாலும் கடக்கண்லயாவது பாருங்க.
கடவுள் நம்பிக்க இருக்குறது நல்லதுதான். அதுக்காக அத மட்டுமே நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது. இத ஏஞ்சொல்றேன்னா... அந்த கட மொதலாளிக்கி ஏழு ஆம்பளைக, ஒம்போது பொம்பளைகனு மொத்தம் பதினாறு புள்ளைக. பதினாறு செல்வங்களையும் பெத்து வாழுன்னா இவரு புள்ளச் செல்வத்துலயே பதினாற பெத்தவரு. அந்தப் புள்ளைக மூலமா பேரம் பேத்திக முப்பத்திரெண்டு பேரு. ரத்த சொந்தம் மட்டுமே இப்புடி ஒரு ஊரு ஜனம். மொதலாளி ஒடம்பு முடியாம படுத்த படுக்கயாயிட்டாரு. டாக்டரு வந்து அப்பப்ப பாத்து மருந்து மாத்திர குடுத்துட்டுப் போறாரு. அப்பாவ பாக்குறதுக்கா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகன்களும், மகள்களும் தங்களோட புள்ள குட்டிகளோட வர்றாக.
"எய்யா நீங்க நல்லா இருக்கணும்னு திருத்தணி முருகன்கிட்ட அங்கப்பிரதட்சிணம் பண்ணிப்புட்டு வாரங்கய்யா. ஒங்களுக்கு ஒண்ணும் ஆகாதுங்கய்யா'னு சொல்லிக்கிட்டே விபூதிய கொண்டாந்து அவரு நெத்தியில அப்பிவிட்டு அதுல கொஞ்சத்த பொளந்திருக்க வாயில போட்டு விடுறாரு. அடுத்த நாளு இன்னொரு மகன் பொண்டாட்டி, புள்ளைக, மாமியா சகிதம் வந்து எறங்குறாரு. ‘"எய்யா ஒங்களுக்கு நோவூன்னதுமே இருப்புக் கொள்ளலய்யா. பழநி முருகன படியேறி பாத்துட்டு வர்றேன். அவம் பாத்துக்குவாய்யா'னு சொல்லிக்கிட்டே துந்நீற எடுத்து "சூ மந்திரகாளி' ரேஞ்சுக்கு அப்பா வாயில போட்டாரு. அதோட விட்டாரா... மாமியாவ பாத்து "எத்த... நீங்களும் விபூதி போட்டுவிடுங்க'னு சொல்ல படுத்துக் கெடந்த மொதலாளி "விபூதிய போட்டுப் போட்டு ஏற்கனவே மண்ணய கவ்வுது. திரும்பவுமா?'னு திடுக்கிட்டு "வேண்டாம்டா விட்றுங்க'னு கண்லயே கெஞ்சுறாரு. பொளந்து கெடந்த வாய செரமப்பட்டு மூடுறாரு. ஆனா சம்பந்தியம்மா விடல. மூடுன வாய விரலக் குடுத்து பொளந்துக்கிட்டு அள்ளிப் போட்டுட்டுத்தான் விட்டுச்சு.
இப்புடி தொண்டக்குழி முழுக்க துந்நீறு ரெம்பி தொண்டக்குழி வறண்டு போகவும் இழுவ ஜாஸ்தியாயிருச்சு. டாக்டரு வந்து பாத்துப்புட்டு கோவத்துல திட்றாரு. "இனிமே விபூதி போடக்கூடாது. பீ கேர்புல்' சொல்லீட்டு கௌம்புனாரு. ‘பொதுவா "என்னங்க டாக்டரு...' இப்புடி கைவிட்டுட்டீங்களே'னு நோயாளிகளோட சொந்தபந்தங்க சொல்றதுதான வழக்கம். ஆனா இந்த மகனுங்களும், மகளுகளும் டாக்டரயே கைவிட்டுட்டாங்க. "கடவுள் தான் டாக்டரு. விபூதிதான் மருந்து'னு முடிவு கட்டீட்டாங்க. ஆளுக்கொரு கோயிலுனு போயி அறுபடவீட்டு விபூதியயும் வந்து எறங்குது. பெருசு பேய் முழி முழிக்கிறாரு.
அடுத்த பகுதி - 4