Skip to main content

அம்மாதான் எனக்கு வில்லி; பாசத்திற்கு ஏங்கிய மகள் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :17

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

parenting-counselor-asha-bhagyaraj-advice-16

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே பகிர்கிறார்.

இதுவரை அம்மா, அப்பா என்று கவுன்சிலிங் கூட்டி வந்தது போன்றல்லாமல், நேரடியாக என்னிடம் ஒரு மாணவியே ஆலோசனை கேட்டு தொடர்பு கொண்டார். நன்கு படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண். என்னிடம் கவுன்சிலிங் கூட்டி வந்ததே அவரின் சித்தப்பா என்பதே ஆச்சரியம். பெற்றோர் வரவில்லையா என்று நான் கேட்ட முதல் கேள்விக்கே அவள் சொன்ன பதில், என் பிரச்சனையே பெற்றோர் தான் என்று ஆரம்பிக்கிறாள். 

நல்ல செல்வாக்கான குடும்பம் என்றாலும், ஒரு பக்கம் அப்பா உடல் தேக்கம் இன்றி வீட்டிலேயே இருக்க, அம்மா இன்னொரு பக்கம் மிகவும் கண்டிப்புடன் வேலைக்குச் செல்லும் பெண்மணி. எனவே பேசவே ஆள் இல்லை. அண்ணன் ஒருவர் இருந்தும் அவருக்கும் இந்த மாணவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால், எந்த விஷயமும் பகிர அந்த மாணவியால் முடியவில்லை.

கதவை சாத்திக் கொண்டு அறையில் தனித்தே அந்த பெண் குழந்தையிலிருந்து இருந்திருக்கிறாள். எந்த அக்கறை, கவனம் இன்றி அந்த பெண் சாப்பிட்டாலா இல்லையா, வெளியில் எதுவும் தொந்தரவு இருக்கிறதா என்று எதுவுமே அவளது பெற்றோர் கேட்டறிந்தது இல்லை. அம்மா என்றாலே பயம் கொள்ளும் வில்லி என்று தான் அவர் அந்த மகளுக்கு பதிந்து வைத்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரைக்கும் நன்றாக படித்து வந்த பெண், தனக்கென்று யாராவது வேண்டும் என்று சினிமாவில் வருவது போல நன்றாக படிக்காத ஒரு பையனோடு காதல் கொண்டு, கடைசியில் அந்த பையன் நன்றாக படிக்க, இப்பெண்ணின் மதிப்பெண் குறைகிறது. என்னதான் பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்த மார்க் என்றாலும், நன்றாக படிக்க வேண்டும், இன்ஜினியரிங் படிக்க வேண்டும், நீட் படிக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு ஆசை இருந்திருக்கிறது. ஆனால் பெற்றோர் இவளின் குறைவான மார்க்கை சுட்டிக்காட்டி மேலும் ஆசைப்பட்டதை படிக்க அனுமதிக்கவில்லை.

இவள் என்னதான் பேச முயற்சித்தாலும் அவர்கள் கேட்க தயாராக இல்லை. இப்பொழுது பிடிக்காமல் அவர்கள் படிக்க வைத்த கோர்ஸை படித்து முடித்து வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றாலும், வெளிநாடு சென்று மேலே படிக்க வேண்டும், வேலை அங்கே தேட வேண்டும் என்றுதான் ஆசை. இதை அண்ணாவிடம் எப்படி சொல்வது, அவர் அதை எப்படி எடுத்து கொள்வார் என்று தயக்கம். எனவேதான் அவள் சித்தப்பாவிடம் கூறி இருக்கிறாள். ஆனால் அவர் வீட்டில் எடுத்து சொன்னாலும் பெற்றோர் கேட்கவில்லை.

நான் நியாயமாக அந்த பெற்றோருக்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ஆனால் அது முடியாத காரியம். எனவே அந்த பெண்ணுக்கு தான் என்னால் கவுன்சிலிங் கொடுக்க முடியும். அவளோ, "என்னால் அடுத்து என்ன என்றே யோசிக்க முடியவில்லை, எனக்கு ஒருத்தரும் இல்லை. சித்தப்பா எனக்கு எது செய்யதாலும் வீட்டில் திட்டுகிறார்கள்"  என்று அந்த பெண் கூறியபோது, அவளின் கல்லூரி படிப்பு எவ்வாறு இருக்கும் என்று கேட்டறிந்தேன். தான் நன்றாக படித்தால் மட்டுமே பெற்றோர் பணம் கொடுப்பார்கள் என்பதால் வேறு வழி இல்லாமல் பிடிக்காமல் படித்ததாகவும், எங்கேயாவது ஓடிப் போய்விடலாம் என்று தோன்றுவதாக கூறினார். எனவே அந்த பெண்ணிடம், "என்ன இருந்தாலும் இந்தளவு படித்து வந்ததே பெரிய விஷயம் அதற்கு அவர்களும் ஆதரவு தந்திருக்கிறார்கள். ஆனால் உன் கனவினை சாதிப்பது முக்கியம் என்றால், நீ நிதி ரீதியாக வலிமையாக வேண்டும்." என்றேன். 

வெளிநாட்டுக்கு சென்று படிக்க வேண்டும் என்று ஆசைபட்டாலும், கனவு கண்டாலும், நம் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். படிப்பதற்கு இந்த காலத்தில் வயது வரம்பே இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம். இந்த பெண்ணும் அந்த வழியில் தான் போயாக வேண்டும் என்றும், தன் பெற்றோர் இப்படித்தான் என்பதையும் அந்த பெண் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர், "எனக்கு பணம் கேட்டால் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் என் கனவினை மட்டும் நிறைவேற்றி கொள்ள அவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை. அவர்கள் கனவையே என்னிடம் திணிக்கிறார்கள். நாளைக்கு திருமணம் என்று வந்தால் கூட என்னிடம் கேட்க மாட்டார்கள். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும், கடிதம் எழுதிவிட்டு ஓடிப்போய் விடவா?" என்று கேட்கிறாள் அந்த பெண். 

அவளிடம் நான் கூறியது, "நாளைக்கு வேறொரு பையனோடு சென்றாலும் கூட அவன் நல்லவனா என்று கூட உன்னால் சொல்ல முடியாது. எனவே நீ நன்றாக படிக்க வேண்டும். முதலில் உன் அண்ணனிடம் திட்டினாலும் போய் பேச வேண்டும். அவரிடம் வெளிநாடு அனுப்ப வேண்டும் என்று எதுவும் கோரிக்கை இன்றி, நான் பேசுவதை கேட்க ஒரு ஆள் வேண்டும் என்று கூறி மனசு விட்டு பேசு. குறைந்தது அண்ணனிடம் சொல்லாமல் தவிர்த்த அந்த மன அழுத்தமாவது இப்படி பதிவு செய்யும் பொழுது கண்டிப்பாக குறையும். மேலும் நீ என்னவெல்லாம் படிக்க ஆசைப்பட்டாயோ அதையெல்லாம் ஆன்லைன் கோர்ஸ் மூலமாக படித்து சர்டிபிகேட் வாங்கி வை. பெற்றோர் உனக்கு பணம் கொடுக்க தயாராக தானே இருக்கிறார்கள். அந்த பணத்தை எல்லாம் சேமித்து வை. நாளை நீ சொந்த காலில் நின்ற பிறகே உனக்கு பிடித்த கனவுகளை நிறைவேற்றி கொள்ளலாம். பெற்றோரை என்னால் சந்திக்க முடியவில்லை என்னால் அவர்களை மாற்ற முடியாது. ஆனால் நீ உன் பெற்றோரை ஏற்றுக் கொண்டு, நீ மன அழுத்தம் இல்லாமல், உனக்கு பிடித்த விஷயங்களை செய்து உன் மனதினை பிசியாக வைத்துக்கொள்" என்று கூறினேன். 

இதுபோல நிறைய மாணவர்கள் என்னிடம் வருகிறார்கள். இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது வெறும் கனவுகள் பற்றி மட்டுமின்றி குழந்தைகள் அவர்களிடம் மனம் விட்டு பேச வரும்போது கேட்க வேண்டும். பணம் சம்பாதிக்கத்தான் எல்லாரும் ஓடுகிறோம். ஆனால் குழந்தைகளிடமும் நேரம் செலவழிக்க வேண்டும். என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். நாளை தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அம்மா அப்பா இருக்கிறார்கள் என்று அந்த குழந்தைக்கு ஒரு மன தைரியம் வரவேண்டும்.